Published : 05 Nov 2019 08:31 AM
Last Updated : 05 Nov 2019 08:31 AM
எஸ்.விஜயகுமார்
சேலம்
ராக்கெட், செயற்கைக்கோள் கண்டு பிடிப்பில் விஞ்ஞானிகள் சாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், விண்வெளி ஆராய்ச்சியை நோக்கி முன்னேறிவரத் தொடங்கிவிட்டனர் சேலம்கொங்கணாபுரத்தை அடுத்த தேவனூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள். அவர்கள் வானிலை ஆய்வுக்கான மினி செயற்கைக்கோள் கொண்ட ஒரு ராக்கெட்டினை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியின் ஆசிரியரும், கொங்கணாபுரத்தில் செயல்பட்டுவரும் டார்வின் அறிவியல் மன்றத்தின் செயலாளருமான தினேஷ் செல்வராசு, 5-ம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 75 பேருக்கு விண்வெளி அறிவியல், இஸ்ரோவின் ஆராய்ச்சி, செயற்கைக்கோள், ராக்கெட் ஆகியவை குறித்து அடிப்படை அறிவியலைபோதித்து வருகிறார். செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுதலில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்க, ராக்கெட் உருவாக்கும் திட்டம் உதித்தது. மு.மதன், சீ.இந்திரேஷ், சே.மோகனப்பிரியா, செ.நந்தினி,சீ.யுவ ஆகிய 5 பேர் கொண்ட மாணவ விஞ்ஞானிகள்குழுவை உருவாக்கினார் ஆசிரியர் தினேஷ் செல்வராசு. அந்தகுழுவினர் சுற்றுப்புற வெப்பம், காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவற்றை அறியக்கூடிய சாதனங்களை ஒருங்கிணைத்து, மினி செயற்கைக் கோளையும், அதை விண்ணில் செலுத்துவதற்கான சிறிய ராக்கெட்டையும் உருவாக்கினர்.
அம்மோனியா, சல்பர் உள்ளிட்ட சில ரசாயனங்களைக் கொண்டு திரவமாக மாறக்கூடிய திட எரிபொருளை உருவாக்கவும், அதைக் கொண்டு, சுமார் 500 மீ. உயரம் வரை செல்லக்கூடிய 250 செமீ. உயரத்துக்கு உறுதியான அட்டையைக் கொண்டுராக்கெட் தயாரிக்கவும் திட்டமிட்டனர். ராக்கெட்டுக்கான எரிபொருள் தவிர, அனைத்தையும் தயார்படுத்திக் கொண்டகுழுவினர் ராக்கெட்டை விண்ணில் செலுத்த தேவனூர் அரசுநடுநிலைப் பள்ளியை ஒட்டியதிறந்தவெளியை ராக்கெட் ஏவுதளமாக தேர்வு செய்தனர்.
எடப்பாடி கல்வி மாவட்ட அலுவலர் விஜயா, கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் ஷேக்தாவூத், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வீரப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி ஆகியோர் முன்னிலையில், மாணவ விஞ்ஞானிகள் குழு கவுன்ட்டவுனை தொடங்கி, திட எரிபொருளை உருவாக்கி, அதை ராக்கெட்டில்பொருத்தினர். பின்னர் அந்தராக்கெட் விண்ணில் செலுத்த தயாரானது. மாணவ விஞ்ஞானிகள் குழு, சக மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் எனசுமார் 200-க்கும் மேற்பட்டோரின் உற்சாக கரவொலிக்குஇடையே, புகையை கக்கியவாறுசீறிக்கொண்டு விண்ணில் பாய்ந்த ராக்கெட், சுமார் 300 மீட்டர் உயரம் வரை சென்றது. அதனுடன் பொருத்தியிருந்த மினி செயற்கைக்கோளில் பதிவான தகவல்களை, செல்போன்ஆப் மூலமாக அறிந்து, பதிவுசெய்து கொண்டது விஞ்ஞானிகள் குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT