Published : 04 Nov 2019 08:27 AM
Last Updated : 04 Nov 2019 08:27 AM
கொல்கத்தா:
மத்திய அரசு சார்பில் 2 மாதம் நடைபெறும் ‘விக்யான் சமாகம்’ சர்வதேச அறிவியல் கண்காட்சி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி), அணுசக்தித் துறை (டிஏஇ) மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சியக மையம் (என்சிஎஸ்எம்) ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘விக்யான் சமாகம்’ என்னும் அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகின்றன. கடந்த மே 8-ம் தேதி முதல் ஜூலை 7 வரை மும்பையிலும், ஜூலை 29-ம் தேதி முதல் செப்டம்பர் 28 வரை பெங்களூருவிலும் ‘விக்யான் சமாகம்’ அறிவியல் கண்காட்சி நடந்தது.
இந்நிலையில், ‘விக்யான் சமாகம்’ கண்காட்சி இன்று முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை கொல்கத்தாவில் நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்கிறார்.
இந்தியா பங்கெடுத்துள்ள சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களான லார்ஜ் ஹாட்ரான் காலிடர் (எல்எச்சி), ப்பேர்(எஃப்ஏஐஆர்) மற்றும் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (ஐஎன்ஓ), சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை (ஐடிஇஆர்) உட்பட பல திட்டங்கள் குறித்து இந்த கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
முன்னதாக மும்பை மற்றும் பெங்களூருவில் நடந்த கண்காட்சியில் 1.4 லட்சம் மக்கள் பார்வையிட்டது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT