Published : 22 Feb 2023 06:12 AM
Last Updated : 22 Feb 2023 06:12 AM
உடுமலை: விபத்தில் உயிரிழந்த மகனின் காப்பீட்டு தொகை ரூ.10 லட்சத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார் அவரது தாய்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்குமாரும் அவரது மனைவி நாகரத்தினமும் இப்பள்ளியில் படித்தவர்கள். அவர்களின்மகன் விஷ்ணுபிரசாத் 4 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார். மகன் இறந்த ஓரிரு மாதங்களிலேயே உடல்நிலை சரியில்லாமல் கணவர் மோகன்குமாரும் காலமானார்.
இந்நிலையில், மகனின் விபத்து காப்பீடு மூலம் கிடைத்த ரூ.10 லட்சத்தை சின்னவீரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார் நாகரத்தினம். இத்தொகையின் வட்டியை பெற்று பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும், தனக்குப் பின் இத்தொகையை பள்ளியின் புரவலர் நிதியில் சேர்க்கும்படியும் உயில் எழுதி, அதற்கான ஆவணத்தை பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார். அப்போது, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சோமசுந்தரம் உடனிருந்தார்.
இதுகுறித்து தலைமையாசிரியர் இன்பக்கனி கூறுகையில், “நமக்கு நாமே திட்டம், புரவலர்கள் உதவி, முன்னாள் மாணவர்கள் என பலரும் இப்பள்ளியின் மேம்பாட்டுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மாணவியான நாகரத்தினம் ரூ.10 லட்சம் உதவி இருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு பள்ளியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள் கிறோம். ஏற்கெனவே, கடந்த ஆண்டு இளநீர் வியாபாரி தாயம்மாள் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT