Published : 16 Feb 2023 06:12 AM
Last Updated : 16 Feb 2023 06:12 AM

விழுப்புரம் | அரசு பள்ளி மாணவர்களுக்கு மள்ளர் கம்பம் பயிற்சி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு

கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2022 விளையாட்டுப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவி பவித்ரா மாவட்ட ஆட்சியர் பழனியிடம் வாழ்த்து பெறுகிறார்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவர் களுக்கு பழந்தமிழர் கலையான மள்ளர் கம்பம் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவர் பொன்.அசோக் சிகாமணி தெரிவித் தார்.

தமிழ் பெருநிலப்பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில் மல்லர் கம்பம் விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர். இந்த விளையாட்டு, சிறந்த உடற்பயிற்சியாகும். சோழர்களும், பல்லவர் களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலைசிறந்த மல்லர்கள் இருந்துள்ளனர். மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலைசிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ‘மாமல்லன்’ என பெருமையோடு அழைக்கப்பட்டார்.

மல்லர் கம்பம் மனதையும் உடலையும் கட்டுப்படுத்தி செய்யும் உடற்பயிற்சி என்பதால் நம் முன்னோரால் போற்றி வளர்க்கப்பட்டது ‘மல்லர் கம்பம்’. மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்றளவும் பிரபலமாக இருந்துவருகிறது.

இந்தியாவில் பல்வேறுமாநிலங்களில் மல்லர் விளையாட்டு அரசு விளையாட்டாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எந்தவிழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரிதாகி வரும் அபூர்வ கலைகளில் மள்ளர் கம்பமும் ஒன்றாகி விட்டது. இருப்பினும் விழுப்புரத்தில் ‘மல்லர் கம்பம்’ பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் நிகழ்த்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘‘கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2022 விளையாட்டுப்போட்டியில் 26 மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள்.

அதில் மல்லர் கம்பம் சார்பில் தமிழக அணிக்காக விழுப்புரம் நகராட்சி பி.என்.தோப்பு அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி பவித்ரா 3 ஆம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். அவரை மாவட்ட ஆட்சியர் பழனி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். 2002-ல்மத்தியபிரதேசம் புஷாவரில் நடந்த போட்டியில் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்தது.

2007-ல் சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த போட்டியில் தமிழக அணி தங்கம் பெற்றது. அண்மைக் காலமாக பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் கம்பம் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் இன்னமும் இந்த விளையாட்டை அங்கீகரிக்கவில்லை.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர் பொன்.அசோக் சிகாமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

பயிற்சியாளர் நியமனம்: தமிழகத்தில் மல்லர் கம்பம் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்க 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ஒரு சங்கமாகி தமிழக அரசை அணுகினால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர தயாராக உள்ளோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் சிலம்பம், மல்லர் கம்பம், வாலிபால் போன்ற விளையாட்டுகளை ஓர் அமைப்பின் கீழ் கொண்டுவர அரசு பரிசீலித்து வருகிறது.

கிரிக்கெட் ஒரு அமைப்பின் கீழ்உள்ளதால் அதற்கு மரியாதை உள்ளது. விழுப்புரத்தில் கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் மல்லர் கம்பம் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பயிற்சியில் 80 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த பயிற்சி தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x