Published : 24 Nov 2022 06:16 AM
Last Updated : 24 Nov 2022 06:16 AM

தாராபுரம் நூலகத்தில் ‘3டி’ அனிமேஷன் கருவிகள்: கடலுக்கடியில் நடந்து செல்லும் உணர்வை பெறும் குழந்தைகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கிளை நூலகத்தில் ‘3டி’ அனிமேஷன் முறையில் கல்வி தொடர்பான வீடியோக்களை கண்டு ரசித்த அரசு பள்ளி மாணவர்கள்.

தாராபுரம்: தாராபுரம் நூலகத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ‘3 டி’ அனிமேஷன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. நூலகத்துக்கு வரும் குழந்தைகள் இந்த அனிமேஷன் கருவியை பயன்படுத்தி கடலுக்கடியில் நடந்துசெல்லும் புதுமையான உணர்வை பெற்று மகிழ்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து முனை சந்திப்பில் அரசு கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஏறத்தாழ 14,000 பேர் நூலக உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின் றன. குழந்தை வாசகர்களை அதிகரிக்கவும், அவர்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்தவும் இந்நூலகத்துக்கு ரூ.2 லட்சம் செலவில் 2 மெய்நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நூலகர் அரவிந்தன் கூறியதாவது:

குழந்தைகள் தின விழா மற்றும் 55-வது தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மெய்நிகர் கருவிகள் எனப்படும் ‘3டி’ அனிமேஷன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இக்கருவிகளில் சூரிய குடும்பம், நட்சத் திரங்கள், காடுகள், அருவிகள், மலைகள், இமயமலையில் நிலவும் பனி முகடுகள், பேட்மிண்டன் விளையாட்டு உட்பட 14 வகையான வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

கடலுக்கடியில் உள்ள காட்சிகளை இக்கருவியில் காணும்போது கடலுக்கடியில் நடந்து செல்வது போன்ற உணர்வை குழந்தைகள் பெற்று மகிழ்கிறார்கள். மீன்கள், திமிங்கலம் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை அருகில் காண்பது போன்றே இருக்கும். இமயமலையை காணும்போது பனியின் நடுவே ஏறிச்செல்வது போன்ற உணர்வு ஏற்படும்.

நூல்களை வாசிக்க வரும் மாணவ, மாணவிகள் இக்கருவிகளை இலவசமாக பயன்படுத்தலாம். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படும். இக்கருவிகளால் மாணவ, மாணவிகள் மத்தியில் வாசிப்பு பழக்கம் மேம்படும். இவ்வாறு அரவிந்தன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x