Published : 11 Nov 2022 06:17 AM
Last Updated : 11 Nov 2022 06:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காவணிபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மேலமேடு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளிக் கட்டிடம் கட்ட கடந்த 1972-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி பள்ளியை தொடங்கி வைத்தார். இந்த தொடக்கப்பள்ளியில் அந்தகாலகட்டத்தில் சாலாமேடு, காவணிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படித்து வந்தனர். தற்போது இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் 3 பேர், 2-ம் வகுப்பில் 4 பேர், 3-ம் வகுப்பில் 7 பேர், 4-ம் வகுப்பில் 4 பேர், 5-ம் வகுப்பில் 6 பேர் என 24 குழந்தைகள் மட்டும் தான் படித்து வருகின்றனர்.
இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 52 ஆண்டுகள் கடந்து விட்டதால் இடிந்து விழும் நிலையில் இருந்தது. எனவே இதனை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சித்துறை முடிவெடுத்தது. அதன்படிகடந்த சில நாட்களுக்கு முன்புஎவ்வித முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அமர்ந்து பாடம் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றுகூடி அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வீட்டை தற்காலிகமாக மாணவர்கள் படிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர், அதையடுத்து அந்த வீட்டின் ஒரேஅறையில் 5 வகுப்பு மாணவர்களும் அமரவைக்கப்பட்டு 2 ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். இதனை அறிந்தவிழுப்புரம் எம்பி ரவிகுமார் இப்பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து விரைவில் புதியகட்டிடம் கட்டித்தருவதாக உறுதியளித்தார்.
அதன்படி அந்த வீட்டில் பாடம் படித்த மாணவர்கள் காலையில் வீட்டுக்குள்ளும், மாலை வேளைகளில் வீட்டின் கொல்லைபுறத்திலும் பாடம் படித்துவருகின்றனர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அப்பள்ளி உள்ள வீதியில் தனியார் இடத்தில் ரூ .1.73 லட்சம் மதிப்பில் தற்காலிகமாக பள்ளி அமைக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, பள்ளிக்கட்டுமானம், பராமரிப்பு உள்ளிட் டவைகள் ஊரகவளர்ச்சித்துறையிடம் உள்ளது. அவர்களை கேட்டுக்கொள் ளுங்கள் என்றனர். மேலும் இது குறித்து கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமியிடம் கேட்டபோது, “தற்காலிகமாக பள்ளி நடைபெற கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வருகின்ற 14-ம் தேதி திங்கட்கிழமை முதல் தற்காலிகபள்ளி வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும். புதிய பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT