Published : 30 Sep 2022 06:19 AM
Last Updated : 30 Sep 2022 06:19 AM
திருப்பூர்: தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு மாணவர்கள் மற்றும்பெற்றோரிடம் வரவேற்பு கிடைத்துள் ளது. இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டிதிட்டத்தை கடந்த 15-ம் தேதிமதுரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். மாநிலஅரசின் முழுமையான நிதியைக் கொண்டு, காலை உணவுத் திட்டம்செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலைசிற்றுண்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக ரூ. 33.56 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு, காலை சிற்றுண்டி தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரத்தில் 77 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி பள்ளிகளில் தொடங்கிவைத்தனர்.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் 1,429 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெற்றோர் எதிர்பார்ப்பு: ஏழை குழந்தைகள், நடுத்தர, கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் இத்திட்டத்தால் பெரிதும் பயன்பெறுகின் றனர். இதன்மூலம், காலை உணவு சாப்பிடாமல் வரும் ஏராளமான பள்ளிகுழந்தைகளின் வயிற்றுப்பசி தீர்க்கப்படுகிறது. கல்வி இடைநிற்றலை தடுக்கவும் இத்திட்டம் பயன்படும். அதனால் இந்த திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பெற்றோர் சிலர்கூறியதாவது: இத்திட்டம் வரவேற்கத் தக்கது. இதனை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினால் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவர். இந்த திட்டத்தை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக அவிநாசி, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவர்களது குழந்தைகள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரைவில் விரிவுபடுத்த வேண்டும். மதிய சத்துணவுத் திட்டத்தை போல் காலை சிற்றுண்டித் திட்டத்தையும், அடுத்த ஓராண்டுக்குள் அனைத்துஅரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத் தினால் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 77 பள்ளிகளுக்குத்தான் அனுமதி கிடைத்துள்ளது. மேலும், கூடுதலான பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு முடிவு செய்தால், அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT