Published : 09 Sep 2022 06:20 AM
Last Updated : 09 Sep 2022 06:20 AM
விருதுநகர்: தினமும் 4 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்து சென்று வருவதால் உரிய நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பந்தனேந்தல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 4 கி.மீ தொலைவில் உள்ள ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று வருகின்றனர்.
காலையில் பள்ளி செல்வதற்கும், மாலையில் வீடு திரும்புவதற்கும் உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை. இதனால், மாணவ, மாணவிகள் தினமும் 4 கி.மீ தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை அன்று பந்தனேந்தலைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் மாணவர்களிடம் விசாரித்தனர். பின்னர், மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அவர்கள் ஆட்சியரிடம், ‘‘விருதுநகரிலிருந்து காலையில் கல்குறிச்சி வழியாக புதுப்பட்டிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து பந்தனேந்தல் கிராமத்துக்கு காலை 10.30 மணிக்கு வருவதாகவும் இதேபோன்று புதுப்பட்டியிலிருந்து விருதுநகர் செல்லும் அரசுப் பேருந்து பிற்பகல் 3.30 மணிக்கே சென்று விடுகிறது. உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் தினமும் மாணவ, மாணவிகள் 4 கி.மீ தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வருகிறோம். மழை நேரங்களில் நனைந்தபடி வருவதால் புத்தகங்கள், நோட்டுகள் நனைந்து மிகுந்த சிரமப்படுகிறோம்" என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலர்களை அழைத்து பந்தனேந்தல் கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நேரத்தை மாற்றி இயக்குமாறு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT