Published : 07 Sep 2022 06:25 AM
Last Updated : 07 Sep 2022 06:25 AM
கிருஷ்ணகிரி: அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றியும், மீண்டும் தண்ணீர் வராத வகையில் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் அகரம். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், அகரம், சாப்பனூர், தட்ரஅள்ளி, குடிமேனஅள்ளி, தேவீரஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அப்பள்ளியை ஒட்டியவாறு ஆவத்தவாடி ஏரி கால்வாய் செல்கிறது. நாகலேரி ஏரியில் நிரம்பி வெளியேறும் தண்ணீர், இக்கால்வாய் வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இக்கால்வாய் தண்ணீர் வெளியேறாமல், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கடந்த 2017-18-ம் ஆண்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஆவத்தவாடி ஏரிகால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சிலநாட்களாக இப்பகுதிகளில் பெய்த கனமழையால், இக்கால்வாயில் அதிகளவில் சென்ற தண்ணீர், பள்ளிக்குள் புகுந்து குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் பள்ளிக்குள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் பள்ளிக்குள் தண்ணீர் செல்வதை நிரந்தரமாக தடுக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT