Published : 29 Aug 2022 06:20 AM
Last Updated : 29 Aug 2022 06:20 AM
திருப்பத்தூர்: மகளிர் மேம்பாட்டுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறுநலத்திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.
திருப்பத்தூர் மேரி இமாகுலேட் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), நல்லதம்பி (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 11,771 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினார். அவர் பேசும்போது கூறியதாவது:
திருப்பத்துார் தொகுதியில் 3 ஆயிரத்து 9 மாணவர்களும், ஜோலார்பேட்டை தொகுதியில் 2 ஆயிரத்து 950 மாணவர்களும், வாணியம்பாடி தொகுதியில் 2 ஆயிரத்து 664 மாணவர்களும், ஆம்பூர் தொகுதியில் 3 ஆயிரத்து 148 மாணவர்களும் என ஒட்டுமொத்த திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 771 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
சமீப காலமாகவே தமிழக அரசின் இலவச நலத்திட்டங்களை சிலர் விமர்சித்து வருகின்றனர். சமத்துவ சமுதாயம் அமைப்பதே தமிழக அரசின் கொள்கை. பணம் படைத்தவர்கள், வசதி படைத்தவர்கள் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். அந்த வரிப்பணம் பல்வேறு துறைக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்ட துறையின் கீழ் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
பேருந்து வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் இருந்து படிக்க வரும் மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். இதுபோன்ற உன்னதமான திட்டத்தை சிலர் விமர்சிப் பதும், கொச்சைப்படுத்துவதும் சரியானதா? என மக்கள் சிந்திக்க வேண்டும்.
இருக்கிறவர்களிடம் இருந்து பெற்று இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதுவே அரசின் கடமையாகும். மேற்படிப்புக்குச் செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கு்ம் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துகிறது.
பெண்களின் ஆற்றல் சாதாரணமானது அல்ல. ஆண்களை காட்டிலும் பெண்களே திறமை வாய்ந்தவர்கள். இன்று வரை அரசு பொதுத் தேர்வுகளில் மாணவிகள்தான் முதலிடம் பிடித்து வருகின்றனர். பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
விழாவில், வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணை தலைவர் சபியுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வரவேற்றார். நிறைவாக, மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT