Published : 26 Aug 2022 07:18 AM
Last Updated : 26 Aug 2022 07:18 AM
கோவை: பள்ளிகளின் அறிவியல் மன்றங்களின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, நிழல் இல்லா நாளை முன்னிட்டு புதன்கிழமை கோவையில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் ஆசிரியர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கோவை ஆஸ்ட்ரோ கிளப் செயலரும், அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியையுமான சாய் லட்சுமி கூறியதாவது:
பூமி இயற்கையாகவே 23.5 டிகிரி தன் அச்சில் சாய்ந்து சூரியனை சுற்றுவதால், பூமியில் உள்ள அனைத்து இடங்களிலும், சமமான சூரிய ஒளி கிடைப்பதில்லை. ஒரு பொருளின் நிழலானது, சூரியன் உச்சிக்கு செல்ல, செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என்பது நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது, நிழலின் நீளம் பூஜ்ஜியம் ஆகிவிடும். நிழல் காலுக்கு கீழே இருக்கும். ஆனால், சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை.
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் ஓரிடத்தில் செங்குத்தாக இருக்கும். அன்றையதினம் பொருளின்நிழல் பூஜ்ஜியமாகும். இதனையே நிழல் இல்லா நாள் என்கிறோம். இந்த நாளின் குறிப்பிட்ட நேரத்தில், 4 முதல் 5 நிமிடங்கள் வரை நிழல் இருக்காது. அந்த வகையில், கோவையில் புதன்கிழமை நண்பகல் 12.25 மணி முதல் 12.30 மணி வரை நிழல் இல்லா நேரமாக இருந்தது. இந்த நாள் அறிவியலில் ஒரு முக்கியமான நாளாக கொண்டாடப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு சூரிய ஒளியின்சாய்வு கோணம், நண் பகலில் நிழலின் நீளம் ஆகியவை குறித்து விளக்கவும், அறிவியல் பாடத்தில் வரும் கணிதத்தில் உள்ள வடிவியலின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் மாணவர்கள் ஒப்பிடவும் இந்த நாள் சிறந்த நாளாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT