Published : 08 Aug 2022 06:26 AM
Last Updated : 08 Aug 2022 06:26 AM
சென்னை: தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு என்ற புதிய தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெறும் பிளஸ் 1 மாணவர்கள் 1500 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி வருவதை போன்று தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம்தோறும் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், எஞ்சிய 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் உள்பட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வுசெய்யப்படுவர்.
தமிழக அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறிவகையில் (அப்ஜெக்டிவ் டைப்) தேர்வு அமைந்திருக்கும்.
இத்தேர்வு அக்டோபர் 1-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் உள்பட) 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திறனறித்தேர்வுக்கு மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இதற்கான விண்ணப்ப படிவத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) ஆகஸ்டு 22 முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து செப்டம்பர் 9-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை அரசுத்தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT