Published : 26 Jul 2022 06:29 AM
Last Updated : 26 Jul 2022 06:29 AM
கள்ளக்குறிச்சி: தமிழர்களின் மரபுக் கலைகளில் ஒன்றாகப் போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் சிலம்பாட்டம், தற்காப்பு கலையாக இருப்பதுடன் உடல் மற்றும் மன நலனுக்கும் உத்வேகம் அளிக்கும் உகந்த சிறப்பான கலையாக திகழ்கிறது.
இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயதுபேதமின்றி அனைவரும் கற்றுக்கொண்டு, உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.
நவீன கணினி யுகத்தில், சிலம்பக்கலை மனிதர்களை விட்டு விலகிச் செல்லும் சூழல் ஏற்படுவதை உணர்ந்த சிலர், சிறப்புமிக்க சிலம்பம் பயிற்சியை ஆர்வத்துடன் கற்றுக்கொள்பவர்களை கண்டறிந்து, எவ்வித பிரதிபலனும் பாராமல் , கற்றுக் கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி சாரா இணை செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருப்பம் உடைய மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2600 மாணவிகள் கல்வி பயில்கின்றனர். மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிலம்ப பயிற்சி குறித்து பள்ளியின் தலைமையாசிரியை கீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தமிழக அரசு, மாணவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரின் பரிந்துரையோடு, எங்கள் பள்ளியில் விருப்பம் உடைய மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வருகிறோம்.
சிலம்பப் பயிற்சியாளர் செல்வம் என்பவர், தன்னார்வமாக வந்து வாரத்தில் இரு நாட்கள் 40 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த பயிற்சி மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைவதோடு, எங்கள் பள்ளிக்கு தொலைவில் இருந்து வரும் மாணவிகளுக்கு அவசியமானதாகும். அனைத்து மாணவிகளும் மிகுந்த ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் சிலம்பம் கற்று வருகின்றனர்" என் றார்.
பயிற்சியாளர் செல்வம் கூறுகையில், "சிலம்பம் கலை எதிகாலத்திலும் பயணிக்க வேண்டும் என்றஎண்ணத்தில், இக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை தேடிப்பிடித்து பயிற்சி அளித்து வருவதுடன், பெண் குழந்தைகளுக்கும், இல்லத்தர சிகளுக்கும் சிலம்பக்கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இப்பணியை செய்து வருகிறேன். பயிற்சி பெறும் மாணவிகளைக் கண்டு, மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்" என்றார்.
தமிழர்களுடைய வீர விளை யாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் சிலம்பத்தை பெண்கள் முறைப்படி கற்றால் இன்னும் வீரத்தில் சிறந்து விளங்கலாம். சிலம்பம் ஒரு கலை மட்டுமல்ல அதன்மூலம் உடலும் மனதும் ஒருநிலைப்படும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT