Published : 26 Feb 2020 09:42 AM
Last Updated : 26 Feb 2020 09:42 AM
பிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி, சாம்பார், ரசம் ஆகிய உணவுப் பொருட்களை விற்கவோ, வாங்கவோ வேண்டாம் என ஆட்சியர் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்திய அரசு, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தை 2011-ம் ஆண்டு முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் நோக்கம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், உணவுப் பொருள் தயாரிப்பு தொழிலகங்களில் உணவுப் பொருளின் தயாரிப்பும், தரமும், தற்கால அறிவியல் வளர்ச்சியையொட்டி இருக்கச் செய்தல். உணவுத் தொழில் புரிவோர் பதிவுச் சான்று அல்லது உரிமம் பெற்று தரமான உணவு பொருள் கிடைக்கச் செய்தல், கலப்பட, காலாவதியான உணவு பொருட்களை தடை செய்தலே ஆகும்.
மேலும், நுகர்வோர்கள் பதிவுச்சான்று, உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாகஉள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். தரமற்ற உணவுப் பொருள்இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி, சாம்பார்,ரசம் ஆகியவற்றை விற்கவோ, வாங்கவோ வேண்டாம். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை செய்தித்தாளில் வைத்து பயன்படுத்த வேண்டாம். கடைகளில் உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்யக் கூடாது. உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை சரியாக கடைபிடித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்பயிற்சியை முன்னிட்டு பாரம்பரிய உணவு கண்காட்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்க மாநில தலைவர் ஜாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT