Published : 14 Feb 2020 10:00 AM
Last Updated : 14 Feb 2020 10:00 AM

துவாக்குடிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தாரை, தப்பட்டை முழங்க கல்விச்சீர் எடுத்துவந்த பெற்றோர்

திருச்சி மாவட்டம் துவாக்குடிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நேற்று கல்விச் சீர் எடுத்து வந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்.

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை பெற்றோர்கள் மிகுந்த உற்சாகத்துடன் திருவிழா போன்ற கொண்டாட்டத்துடன் கல்விச் சீராக நேற்றுஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், பள்ளிக்குத் தேவையான உபகரணங் களை அரசு வழங்கும் அதே நேரத்தில் பெற்றோர்களும், அப்பகுதியைச் சேர்ந்த புரவலர்களும் வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள துவாக்குடிமலை (வடக்கு) பாரதிதாசன் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் கல்விச் சீர் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

ஊர்வலம்

இதையொட்டி ஊர்மக்கள் மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், பேனா, பென்சில், குடம், தட்டு, பெல்ட், டை, மின்விசிறி, வாளி, நாற்காலிகள், அறிவியல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றுடன் தாரை, தப்பட்டை முழங்க பள்ளிக்கு ஊர்வலமாக வந்தனர்.

பள்ளியின் வாசலில் கல்விச்சீர் எடுத்து வந்த பெற்றோருக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கல்விச் சீர்வரிசைப் பொருட்களை பள்ளியின் தலைமை ஆசிரியை கருணாம்பாளிடம் ஒப்படைத்தனர்.

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் வசதிகள் குறித்தும் பள்ளித் தலைமை ஆசிரியை கருணாம்பாள் பேசினார்.

கல்விச்சீர் நிகழ்ச்சியையொட்டி, பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் கும்மியடித்துப் பாட்டுப் பாடி மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x