Published : 06 Feb 2020 10:09 AM
Last Updated : 06 Feb 2020 10:09 AM
சாரணர் இயக்கம் நற்பண்புகளை வளர்க்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவிகள் மேல்நிலைப் பள்ளியில் ஆளுநரின் ராஜ்ஜிய புரஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:
குழந்தை பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கம் சாரணர் இயக்கம். ராணுவகட்டுக்கோப்பு இளைய தலைமுறை யிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில், ராணுவ வீரர் பேடன்பவுல் இந்த இயக்கத்தை தொடங்கினார்.
குருளையர், சாரணர், திரிசாரணர், நீலப்பறவையினர், சாரணியர், திரிசாரணியர் என மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனி அமைப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு பயிற்சியளிப்பவர் ஸ்கவுட் மாஸ்டர் எனவும், மாணவிகளுக்கு பயிற்சியளிப்பவர் கைடு கேப்டன் என்றும் அழைக்கப்படுவர். தற்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர் சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ளனர்.
சாரண இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின் றன. மாநில அளவில் சாதனை படைப்பவர்களுக்கு ராஜ்ஜிய புரஷ்கார் விருதை ஆளுநர் வழங்குவார். தேசியஅளவில் சாதனை படைப்பவர்களுக்கு ராஷ்டிரபதி விருதை குடியரசுத் தலைவர் வழங்குவார். தூத்துக்குடி கல்விமாவட்டம் சார்பில் 146 சாரணர்கள், 95 சாரணியர்கள் ராஜ்ஜிய புரஷ்கார் தேர்வில் வெற்றிபெற்று விருது பெறுகின்றனர் இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர் இ.வசந்தா, சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் செ.எட்வர்ட் ஜான்சன்பால், மாவட்ட ஆணையர் (சாரணர் பிரிவு) ஆர்.சண்முகம், மாவட்ட தலைவர்கள் எஸ்.தர்மராஜ், பி.முருகானந்தம், ஏ.மங்கள்ராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் முரளி கணேசன், தலைமை ஆசிரியை எம்.எஸ்.சாந்தினி கவுசல் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT