Published : 20 Jan 2020 09:46 AM
Last Updated : 20 Jan 2020 09:46 AM
விருதுநகர் பள்ளியில் நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சியில் இடம்பெற்ற தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி, சோலார் சிட்டி உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் ஆகியவை சார்பில் திறமைமிக்க மாணவர்களைத் தேர்வு செய்து, "இன்ஸ்பயர் அவார்ட்ஸ்-மானாக்” விருது வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த விருதை பெறுவதற்காக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த 55 மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி கே.வி.எஸ். மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தொடங்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சண்முகநாதன், கிருஷ்ணமூர்த்தி, சின்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மழைநீர் சேகரிப்பு
தேசிய புத்தாக்க அறக்கட்டளை சார்பில் மெரின் டயானா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் டேவிட் பொன்னுதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்புகளாக மழை நீர் சேகரிப்பு, அணு மற்றும் அனல் மின் நிலையம், சோலார் சிட்டி, தீ பிடித்தால் தானே தீயை அணைக்கும் முறை, செயற்கைக்கோள், மூலிகை தாவரங்கள், தானியங்கி வேகக் கட்டுபாட்டுக் கருவி, நெகிழி பயன்படுத்தினால் ஆயுளுக்கு உண்டாக்கும் கேடு போன்ற பல அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாநில கண்காட்சிக்கு தேர்வு
இதில் சிறந்த 11 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் மிகச் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப் பாளர் ராஜா செய்திருந்தார்.விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment