Published : 13 Jan 2020 10:44 AM
Last Updated : 13 Jan 2020 10:44 AM
அரியலூரில் நடந்த மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சியில், சூரிய சக்தியில் இயங்கும் குளிர்சாதன பெட்டி, கரும்புத் தோகையை உரிக்கும் விவசாய இயந்திரம் உள்பட 55 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டு அரியலூர் மாவட்டத்தில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்ற அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.முத்து கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் அம்பிகாபதி (அரியலூர்), சுந்தர்ராஜூ (செந்துறை), பாலசுப்பிர மணியன் (உடையார்பாளையம்), பள்ளித் துணை ஆய்வாளர் ஆர்.பழனி சாமி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கண்காட்சியில், ஏற்கெனவே மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் தேர்வு செய்யப்பட்ட, 36 பள்ளிகளிலிருந்து 55 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, செலவினத் தொகையாக அரசு சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
55 வகை அறிவியல் படைப்புகள்
கண்காட்சியில், மாற்று மின் சக்தியாக சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்சாதனப் பெட்டி, கரும்புத்தோகையை உரிக்கும் விவசாய இயந்திரம், மின்னணு சாதனத்தின் மூலம் போக்குவரத்தை முறைப்படுத்துதல், சுனாமி பேரலையை தடுக்கும் தொழில்நுட்பம், இயற்கை முறையில் கழிவு நீரை சுத்திகரித்தல் உள்ளிட்ட 55 வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT