Published : 06 Jan 2020 08:44 AM
Last Updated : 06 Jan 2020 08:44 AM
விழிப்புணர்வு மூலம் விபத்துக்களைக் குறைக்கும் முயற்சியாக திருச்சியி லுள்ள பள்ளிகள்தோறும் மாணவ, மாணவிகளை உறுப்பினராகக் கொண்டு சாலைப் பாதுகாப்பு மன்றம் அமைக்கும் நடவடிக்கையில் மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடைபெற்ற 63,920 சாலை விபத்துகளில் 12,216 பேர் உயிரிழந்துள்ளனர். 74,531 பேர் காயமடைந்துள்ளனர். சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னல்களில் விதிமீறல்களில் ஈடுபடுதல், மது அருந்திவிட்டும், செல்போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுதல் போன்ற சாலை விதிமுறை மீறல்களால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இவை குறித்து பொதுமக்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வருங்காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நோக்கில் மாணவ, மாணவிகளிடம் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் சாலைப் பாதுகாப்பு மன்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் அமைப்பது தாமதமாகி வந்தது.
இந்நிலையில் இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட, மாநகர போலீஸாருக்கும் டிஜிபி திரிபாதி தற்போது அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திருச்சிமாநகரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சாலைப்பாதுகாப்பு மன்றங்களை அமைக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி, இ.ஆர் மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் பள்ளி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சாலைப்பாதுகாப்பு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் மாநகர காவல் உதவி ஆணையர்கள் அருணாச்சலம், விக்னேஸ்வரன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் நாவுக்கரசு, மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் கணபதி, எம்.சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதேபோல, மற்ற பள்ளிகளிலும் சாலைப் பாதுகாப்பு மன்றத்தை தொடங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தலைமை ஆசிரியரே தலைவர்
இதுகுறித்து மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் எம்.சேகரன் கூறும்போது, ‘‘பள்ளிகளில் அமைக்கப்படும் சாலைப் பாதுகாப்பு மன்றத்துக்கு தலைமை ஆசிரியர் தலைவராக இருப்பார். இதற்கான குழுவில் உடற்கல்வி அல்லது பிற பாடத்துக்கான ஒரு ஆசிரியர், அந்த பகுதியின் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக இருப்பார்கள். 6 முதல்9-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேரலாம். அவர்களின் கைகளில் கட்டிக் கொள்ளும் வகையில்சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் லோகோவுடன் கூடிய பட்டை(Band) அளிக்கப்படும். இந்த மன்றங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட அளவில் எஸ்.பி தலைமையிலும், மாநகர அளவில் காவல் துணை ஆணையர் தலைமையிலும் குழுக்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.
அனைத்து பள்ளிகளிலும்
திருச்சி மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ கூறும்போது, ‘‘சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஒவ்வொரு மாணவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் பள்ளிகள்தோறும் இந்த மன்றத்தின் மூலம் அளிக்கப்படும்.
இதிலுள்ள மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிகளில் மட்டுமின்றி குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களிடம் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், விதிமீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்குவார்கள். மன்றத்தில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் அளிக்கப்படும். திருச்சி மாநகரிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இம்மன்றம் விரைவில் உருவாக்கப்படும்’’ என்றார். அ.வேலுச்சாமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT