Published : 29 Nov 2019 10:51 AM
Last Updated : 29 Nov 2019 10:51 AM
தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் கோவை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லார் பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியின் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவிகள் அணி, சி.பி.எஸ்.சி. பள்ளி
களுக்கிடையிலான தேசிய ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் ஏழு மண்டலங்களில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஹாக்கி போட்டிகளில் வென்ற பள்ளிகள், வாரணாசியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்றன. கோவை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவிகள் அணி லீக் போட்டிகளில், டெல்லி ஜெனரல் ராஜ் சீனியர் செகண்டரி பள்ளி, ராய்கர் ஓ.பி.ஜின்டல் பள்ளி, ஓமன் இந்தியன் பள்ளியை வென்றது.
சாம்பியன் பட்டம்
வாரணாசியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கர்நாடக மாநிலம் குடகு பாரதிய வித்யா பவன் பள்ளியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வென்று, சாம்பின் பட்டத்தை கைப்பற்றியது. இப்பள்ளி மாணவி எஸ்.வர்ஷினி ‘சிறந்த முன் ஆட்ட வீராங்கனை’ பட்டத்தையும், சி.வி.தனுசியா ‘சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை’ பட்டத்தையும் பெற்றனர்.
இதேபோல, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் அணி, தேசிய அளவிலான போட்டியில் 3-ம் இடத்தை வென்றது. மாணவர் எஸ்.எஸ்.ஸ்ரீராம் ‘சிறந்த முன் ஆட்ட வீரர்’ பட்டத்தைப் பெற்றார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர் மற்றும் மாணவிகள் அணிகள், தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று விளையாடியதுடன், தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வந்துள்ளன. கடந்த ஆண்டு பஞ்சாப்பில் நடைபெற்ற போட்டியில் இப்பள்ளி அணிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றன.
பாராட்டு விழா
கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், பள்ளி நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, செயலர் கவிஞர் கவிதாசன் ஆகியோர் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
மேலும், பள்ளியின் விளையாட்டுத் துறை இயக்குநர் ஜெரால்டு ஆரோக்கிய ராஜ், பயிற்சியாளர்கள் எஸ்.யோகானந்த், டி.பி.அனிதா ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், பள்ளியின் கல்வி ஆலோசகர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் ரா.உமா மகேஸ்வரி, தமிழ்நாடு ஹாக்கி பிரிவு துணைத் தலைவர் பி.செந்தில் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT