Published : 27 Nov 2019 09:35 AM
Last Updated : 27 Nov 2019 09:35 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முன்மாதிரி அரசு பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சின்ன உப்பனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி. படம்: ஜோதி ரவிசுகுமார்

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்தில் உள்ள சின்ன உப்பனூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் உட்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு தனியார் பள்ளிக்கு நிகராக திகழும் இப்பள்ளி இதர அரசுப் பள்ளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மலைப்பகுதி மற்றும் வனம் சார்ந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், மாவட்ட கல்வித் துறை சார்பில் மலைவாழ் மக்களிடையே புதிய மாணவர் சேர்க்கை, இடைநிற்றல் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தனியார் நிறுவனம் மற்றும்தொண்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதியை மேம்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் முறையும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் தனியார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட தளி ஒன்றியம் சின்ன உப்பனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடப்பாண்டில் 30 மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து விலகி அரசுபள்ளியில் சேர்ந்துள்ளனர். தளி ஒன்றியத்தில் இதர அரசு பள்ளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இந்த அரசு நடுநிலைப்பள்ளி விளங்கி வருகிறது.

இதுகுறித்து சின்ன உப்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வி.நாகராஜூ கூறியதாவது:1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசுப் பள்ளியில் 2008-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகிறேன். இப் பள்ளியில் நடப்பாண்டில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். சுமார்73 அண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பலதனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளின் உதவியுடன் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக பெங்களூரு நகரில் உள்ள பெங்களூரு கிழக்கு ரவுண்ட்டேபிள் இந்தியா -27 மற்றும் பெங்களூரு கிழக்கு லேடீஸ் சர்க்கிள் - 31ஆகிய அமைப்புகளின் நிதியுதவியுடன் ரூ.50 லட்சம் மதிப்பில் சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட நவீன கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல ரூ.5 லட்சம் மதிப்பில் பள்ளியைச் சுற்றிலும் மதில் சுவரும், ரூ.7 லட்சம் மதிப்பில் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ, மாணவிகளின் குடிநீர் தேவைக்காக 25 ஆயிரம் லிட்டர்கொள்ளளவு உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி ஆதித்யா பிர்லா தொண்டு அமைப்பு மூலமாக ஆண்டுதோறும் ரூ. 50ஆயிரம் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் தரமான கல்வியுடன், அறிவியல் போட்டி மற்றும் விளையாட்டுகளிலும் மாணவர்களை ஊக்குவித்து வருகிறோம்.

இவற்றுடன் கராத்தே பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலம் பேச்சுப்பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இப்பள்ளியின் தரமான கல்வியுடன் கூடிய சிறப்பு பயிற்சிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு ஆகிய சிறப்பு நிலையை அறிந்த பெற்றோர்கள் மூலமாக நடப்பாண்டில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து விலகி இந்த அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x