Published : 25 Nov 2019 10:09 AM
Last Updated : 25 Nov 2019 10:09 AM
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மூங்கில் தண்ணீர் குடுவைகளை கரூர் பள்ளி மாணவிகள் தயாரித்து மாநில அளவிலான அறிவியல் போட்டியில் காட்சிப்படுத்தினர். இதற்கு பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரூர் மாவட்ட அளவிலான 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 360 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 22 ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன. இதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி ஆசிரியர் ஜெ.ராஜசேகரின் வழிகாட்டுதலின்படி 8-ம் வகுப்பு மாணவிகள் மூ.ஹேம்ஸ்ரீ, மூ.ரிதன்யா ஆகியோர் மூங்கிலைக் கொண்டு உருவாக்கிய சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத தண்ணீர் குடுவைகள் என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையும் ஒன்று. பொதுவாக பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களையே நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடியது. இந்த நிலையில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கக்கூடிய மூங்கிலைக் கொண்டு பள்ளிமாணவிகள் தண்ணீர் பாட்டிலை உருவாக்கியுள்ளனர்.
மூங்கிலின் தோற்றம் உருளை வடிவத்தில் இருப்பதாலும், அதன் இருகணுக்களுக்கிடையே உள்ள வெற்றிடம்குடுவையைப் போன்ற அமைப்பு கொண்டது என்பதாலும் மூங்கிலில் தண்ணீர்குடுவையை எளிதில் வடிவமைக்க முடியும் என்பதால் பள்ளி ஓவிய ஆசிரியர் தங்க.கார்த்திகேயன் உதவியுடன் மூங்கில் தண்ணீர் குடுவையை அவர்கள் வடிவமைத்துள்ளனர். மாவட்ட அளவில் பங்கேற்ற இந்தஆய்வுக் கட்டுரை மாநில அளவிலானபோட்டிக்குத் தேர்வாகி வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவிகளின் வழிகாட்டி ஆசிரியர் ஜெ.ராஜசேகரன் கூறியதாவது:
இன்றைய மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை உணரவைத்து அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களிடையே நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சமர்ப்பிக்கப்பட்டதே இந்த ஆய்வுக் கட்டுரை.
இந்த மூங்கில் குடுவை அசாம் மாநிலத்தில் நடைமுறையில் இருந்ததாகவும், தென்னிந்தியாவில் இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதாலும் இந்த ஆய்வைப் பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைத்தேன். மேலும், உலோகத்தால் தயாரிக்கப்படும் தண்ணீர் பாட்டில்களை விட மனித உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் இந்த மூங்கில் குடுவைகள் பன்மடங்கு பயன்தரக் கூடியவை.
உடல் எடையைக் குறைக்கும்
மூங்கில் தண்ணீர் குடுவை யில் தண்ணீர் வைத்துக் குடிப்பதனால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இதயம் மற்றும் புற்று நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. செரிமானம் தூண்டப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கும். இயற்கை ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசிய தாதுக்கள் கிடைக்கின்றன. கோலகன் என்ற வேதிப்பொருளை மூங்கில் சுரக்கிறது. இது தோல் செல்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியது. தண்ணீரை மூங்கில் குளிர்ச்சியாக வைக்கிறது. உடலுக்கு தேவையான முக்கிய வைட்டமின் கிடைக்கிறது. அனைத்து காலத்துக்கும் மிக ஏற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment