Published : 25 Nov 2019 09:52 AM
Last Updated : 25 Nov 2019 09:52 AM
திண்டுக்கல்லில் ‘திண்டுக்கல் வாசிக்கிறது’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தங்களை தாண்டி தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாசித்தனர்.
திண்டுக்கல் இலக்கியக்களம் அமைப்பின் சார்பில் புத்தகத் திருவிழா திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நவம்பர் 28-ம்தேதி தொடங்கி டிசம்பர் 2-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதையொட்டி திண்டுக்கல் அச்யுதா அகாடமியில் ‘திண்டுக்கல் வாசிக்கிறது’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் இலக்கியக்களம் தலைவர் மு.குருவம்மாள் தலைமை வகித்தார். அந்த அமைப்பின் செயலாளர் ச.ராமமூர்த்தி வரவேற்றார். அச்யுதா கல்விக் குழுமத்தின் செயலாளர் மங்கள்ராம், டட்லி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள்பாடப்புத்தங்களை தாண்டி தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாசித்தனர். திண்டுக்கல் இலக்கியக்களம் தலைவர் மு.குருவம்மாள் பேசும்போது, "புத்தக வாசிப்பு என்பது வாழ்வின் அடிப்படைத் தேவை. 23 ஆண்டுகள் வாசிப்புக்குப் பின்னரே மூலதனம் என்றநூலை காரல் மார்க்ஸ் எழுதினார். ஒருவர் தனது வாழ்நாளில் பத்தாயிரம் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
சமுதாயத்தில் மதிப்பு மிகுந்தவர்களாக உருவாவதற்கு புத்தக வாசிப்பு மிகவும் முக்கியம்" என்று குறிப்பிட்டார். நிறைவாக, திண்டுக்கல் இலக்கியக்களம் துணைத் தலைவர் ஆர்.எஸ்.மணி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT