Published : 29 Oct 2019 02:22 PM
Last Updated : 29 Oct 2019 02:22 PM

சிலம்பம், சுருள்வாள், மரக்கால் ஆட்டம்: மறைந்த வீர விளையாட்டுகளை மீட்டெடுக்கும் மாணவர்

கி.தனபால்

ராமநாதபுரம்

சிலம்பம், சுருள்வாள், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம் எனத் தமிழர்களின் மறைந்த வீர விளையாட்டுக்களை மீட்டெடுத்து பறைசாற்றி வருகிறார் ராமநாதபுரம் பள்ளி மாணவர்.

ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் லோ.ஆகாஷ். இவர் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பம், தீப்பந்தாட்டம், சுருள்வாள், இரட்டை சுருள்வாள், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடாட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம் (கட்டைக்கால் ஆட்டம்) ஆகிய கலைகளில் மாநில அளவில் சிறந்து விளங்குகிறார். தனது 13-வது வயதில் 6.5 அடி உயரமான மரக்காலில் நின்று ஆடி சாதனை புரிந்துள்ளார். இவருக்கு தமிழக அரசு 2015-ம் ஆண்டு கலை இளமணி விருது வழங்கி கவுரவித்தது.

மாணவர் ஆகாஷ், தனது 3-வதுவயதில் தனது தந்தையும் சிலம்பஆசிரியருமான லோகசுப்பிரமணியனிடம் சிலம்பம் கற்கத் தொடங்கினார். 5-வது வயதில் பொது இடங்கள், மேடைகளில் சிலம்பம் விளையாடினார். சிலம்பத்தில் தொடங்கிய இவரது விளையாட்டு குருவின் பயிற்சியால் சிலம்பம், இரட்டைச் சிலம்பம், தீப்பந்தம், மரக்கால் ஆட்டம் எனத் தொடர்ந்து தமிழர்களின் வீர விளையாட்டுகள், கிராமிய நடனங்களை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரப்பி ராமநாதபுரம் மண்ணுக்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

மாநில, தேசிய கலாச்சாரப் போட்டிகள், வீர விளையாட்டுப் போட்டிகள், டெல்லியில் நடைபெறும் குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 2017-ம் ஆண்டு மாநில கிராமிய நடனப்போட்டியில் 3-வது பரிசும், இந்தாண்டு தமிழ்நாடு சிலம்பக் கழகம் நடத்திய மாவட்ட போட்டியில் சிலம்பத்தில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். கலை பண்பாட்டுத் துறை அண்மையில் நடத்திய மரக்கால் ஆட்டப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். தமிழர்களின் மறைந்த பல கலைகளுக்கு மாணவர் ஆகாஷ் போன்ற ஒரு சிலரே உயிர் கொடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x