Published : 25 Oct 2019 10:46 AM
Last Updated : 25 Oct 2019 10:46 AM

அறிவியல் துறையில் ஆர்வம் கொண்ட 370 மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கிய அரசு பள்ளி ஆசிரியர்

கரூர்

370 மாணவர்களை இளம் விஞ்ஞானிகள் சான்றிதழ் பெற வைத்து கரூர் வெள்ளியணை ஆண்கள் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் பெ.தனபால் சாதனை படைத்துள்ளார்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பெ.தனபால். கிராமப்புற மாணவர்களை இளம்விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த 2008-ம் ஆண்டு பள்ளியில் இளம்விஞ்ஞானிகள் குழுவைத் தொடங்கினார்.

அறிவியல் துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஒருங்கி ணைத்து, மாணவர் தனித்திறன் வெளிப்பாடு, அறிவியல் கருத்தரங்கம்,விநாடி வினா, அறிவியல் நாடகம், அறிவியல் கண்காட்சி, ஆய்வுக்கட்டுரை, குறும்படம் தயாரித்தல், களப்பயணம் என இதுவரை 700-க்கும் மேற்பட்ட மாணவர்களை பங்கு பெறச் செய்துள்ளார்.

மேலும், கிராமப்புற மாணவர்கள் அடிப்படை அறிவியலை எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கற்றல் மூலம் தனது சொந்த முயற்சியில் 100 எளிய இயற்பியல் சோதனைகளை ஒளி ஒலி வடிவில் உருவாக்கி, அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அறிவியல் துறையில் ஆர்வமான மாணவர்களை எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், அண்டம், சுற்றுச்சூழல், மருத்துவம், ரோபோடிக்ஸ் ஆகிய பிரிவின் கீழ் மாணவர்கள் விருப்பத்துக்கிணங்க பயிற்சி அளிக்கிறார். இதனால் மாணவர்கள் அடிப்படை அறிவியலை எளிதில் புரிந்துக்கொண்டு சமுதாயத்தில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் 20 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி சர்வதேச அளவில் 33 தங்கப்பதக்கம், 47 விருதுகள், 49 கோப்பைகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், 373 அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று, அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியதன் மூலம், 30 முதல் பரிசுகள் உட்பட 228 பரிசுகள் பெற்றுள்ளனர். முத்தாய்ப்பாக மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் இவரது முன்னாள் மாணவர் பொ.ஹரிஹரன் ஜப்பானில் அறிவியல் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டுள்ளார்.

மற்றொரு மாணவர் ம.ஹரிஹரன் ஜப்பான் கல்விப் பயணம் சென்று வந்துள்ளார். மேலும், மாணவர் ம.சதீஷ்குமார் ஜப்பான் செல்ல தேர்வு பெற்றுள்ளார். மாணவர் ர.சதீஷ்குமார் பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். மேலும் இவரது வழிகாட்டுதல் மூலம் 370 அரசுப்பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானி சான்றிதழ் பெற்றுள்ளனர். ஐசிடி தொழில்நுட்பம் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஆவணப்படத்தை தயாரித்து,இயக்கியுள்ளார். இந்த ஆவணப்பட டிவிடியை 1,122 பள்ளி கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கி, 7,66,854மாணவ, மாணவிகள் மத்தியில் அப்துல்கலாம் கனவை விதைத்துள்ளார்.

மேலும், சீமைக்கருவேல மரம் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, ஆசிரியர் பெ.தனபால் வழிகாட்டுதலின்பேரில், 30 கிராம் எடையில் நீர் செயற்கைக்கோள் 30-ஐ, இப்பள்ளி மாணவர்கள் தயாரித்து ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ இந்தியா நிறுவனம் மூலம் ராட்சத பலூனில் விண்ணில் அண்மையில் செலுத்தினர்.

மேலும், ஏபிஜெ அப்துல்கலாம் நினைவு விருது, அப்துல்கலாம் சேவகர்விருது, விஷன் 2020 விருது, அன்பாசிரியர் விருது, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது, சிறந்த இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் ஆசிரியர் விருது, கரூர் சாதனையாளர் விருது,மாணவ விஞ்ஞானிகளின் தந்தை விருது என 47 விருதுகளை ஆசிரியர் தனபால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x