Published : 21 Oct 2019 09:24 AM
Last Updated : 21 Oct 2019 09:24 AM

அதிக ஒலி எழுப்பி வனவிலங்குகளை விரட்டும் துப்பாக்கி: கெம்பகரை அரசு பள்ளி மாணவர்கள் வடிவமைப்பு

அதிக ஒலி எழுப்பி வனவிலங்குகளை விரட்ட மாணவர்கள் தயாரித்த துப்பாக்கியின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர்.

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி

அதிக ஒலி எழுப்பி வனவிலங்குகளை விரட்டும் துப்பாக்கியை கெம்பகரை அரசு பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லை அருகே அமைந்துள்ளது, கிருஷ்ணகிரி மாவட்டம். 1.45 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியும், 115 காப்புகாடுகள் கொண்டுள்ளது இம்மாவட்டம். இங்கு யானைகள், காட்டுப்பன்றி, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.

தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் யானைகளால் அதிகளவில் பயிர் சேதம் ஏற்படுகிறது. இதன் தாக்குதலுக்கு மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதேபோல் காட்டுப்பன்றி, முள்ளம் பன்றிகளால் நிலக்கடலை, கரும்பு போன்ற பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள், வனத்துறையினரால் பட்டாசு வெடித்து ஒலி எழுப்பி விரட்டப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுவதுடன், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் அதிக ஒலி எழுப்பி, ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளை விரட்டும் துப்பாக்கியை வடிவமைத்துள்ளனர் கெம்பகரை அரசு பள்ளி மாணவர்கள். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற, கெம்பகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் இப்படைப்பு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசியர் லாரன்ஸ் கூறியதாவது:

எங்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் செல்வக்குமார், சந்தியா, அன்பரசு ஆகியோர், அறிவியல் ஆசிரியர் முருகன் உதவியுடன் ‘அதிக ஒலி துப்பாக்கி’யை வடிவமைத்துள்ளனர்.

இதன்மூலம் விளைநில பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகள், காட்டுப்பன்றிகள், பறவைகளை, அதிக ஒலியெழுப்பி விரட்ட முடியும். இதைவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே ஒலி துப்பாக்கியை தயார் செய்யலாம். பிளாஸ்டிக் குழாய்கள் காகிதங்கள், வாசனை திரவியம் மட்டும் போதுமானது.

காகிதங்களைக் கொண்டு குண்டுகள் தயார் செய்து, பிளாஸ்டிக் குழாயில் ஒரு பக்கம் அடைத்து வைத்தும், இடையே ஒரு துளையிட்டு, அங்கு காஸ் லைட்டர் பொருத்தி, மற்றொரு புறத்தில் 2 அங்குல பிளாஸ்டிக் குழாய் பொருத்தி அதில் காகித குண்டுகள் நிரப்பி வைக்கப்படும்.

ரூ.150 மட்டுமே செலவாகும்

பின்னர் வாசனை திரவியத்தை சிறிதளவு குழாயில் செலுத்தி, காஸ் லைட்டர் மூலம் தீப்பற்றச் செய்தால், அழுத்ததின் காரணமாக காகித குண்டுகள் அதிக ஒலியுடன் வெளியேறும். சுமார் 50 முதல் 100 அடி தூரம் காகிதகுண்டுகள் செல்லும். இதை தயாரிக்க
ரூ.150 மட்டுமே செலவாகும். நூற்றுக்கும் மேற்பட்ட காகித குண்டுகள் தயார் செய்து வெடிக்க செய்து ஒலிஎழுப்ப இயலும்.

ஒலியால் வன விலங்குகளுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாதுஇவ்வாறு லாரன்ஸ் கூறினார்.
அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மாணவர்களின் புதுமையான துப்பாக்கியை மாவட்ட ஆட்சியர் பிரபாகர், வனத்துறையினர், விவசாயிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x