Published : 18 Oct 2019 10:02 AM
Last Updated : 18 Oct 2019 10:02 AM
என்.சன்னாசி
மதுரை
சிவகங்கை மாவட்டம், திருப்பாச் சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியை தத்தெடுத்து ரூ.20 லட்சத்தில் சீரமைத்து, வைர விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் நிலையைக் கண்டு அப்பள்ளியைத் தத்தெடுத்து முழுமையாக சீரமைக்க முன்வந்தனர். இதற்காக வாட்ஸ் அப் குரூப் (GHSS TPC 60 YEAR) ஒன்றை தொடங்கினர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு முதல் அண்மையில் அங்கு பயின்றவர் வரை குரூப்பில் 500-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைக்கப்பட்டனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது அங்கு ஆசிரியராகப் பணிபுரிபவருமான ராமநாதன் உள்ளிட்ட சில முன்னாள் மாணவர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினர்.
இப்பள்ளியை நேரில் ஆய்வு செய்து ரூ.20 லட்சம் செலவில் பள்ளியை சீரமைக்க திட்டம் தயாரித்தனர். ஆசிரியர் ராமநாதன், முன்னாள் மாணவர்சங்கத் தலைவர் பாண்டி ஆகியோர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கினர். இதன் மூலம் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களிடம் நிதி திரட்டுகின்றனர். கடந்த 4 மாதத்தில் ரூ. 13 லட்சம் செலவில் பல்வேறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆசிரியர் ராமநாதன் கூறும்போது, "முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்புடன் ரூ.7.50 லட்சத்தில் கழிப்பறை புதுப்பித்தல், தற்காலிக அறிவியல் ஆய்வகம், சுற்றுச்சுவர் புதுப்பித்தல், விளையாட்டு மைதானம் சீரமைத்தல், நினைவு அரங்கம் பணிகள் முடிவடைந்துள்ளன. வர்ணம் பூசுதல் உட்பட மேலும் ஓரிரு பணிகள் பாக்கியுள்ளன. இவற்றை துரிதமாக முடித்து வரும் டிசம்பரில் வைர விழா (60-ம் ஆண்டு) நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாண்டி கூறும்போது, "முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, மாஜிஸ்திரேட் பாண்டி மகாராஜன், வங்கி அதிகாரி லோகநாதன், சிங்கப்பூர் ஆசிரியர் சசி குமார் என சிலர் இப்பள்ளிக்கு அதிகமாக நன்கொடை
அளித்துள்ளனர். மேலும் காவல் துறை, ராணுவம், கல்வி, பத்திரிகை உட்பட பல்வேறு துறைகளில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பணியில் உள்ளனர். அனைவரும் வைர விழாவில் பங்கேற்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT