Published : 17 Oct 2019 08:47 AM
Last Updated : 17 Oct 2019 08:47 AM
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவ்விழாவுக்கு தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை வகித்தார். ஏர்வாடி கிளை நூலகத்தின் நூலகர் பால சோமநாதன் முன்னிலை வகித்தார். 56 பள்ளி மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டனர். அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவரது புத்தக வாசிப்பு ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர் தமிழரசி மாணவர்களுக்கு விளக்கினார். நூலகத்தில் எவ்வாறு புத்தகம் எடுப்பது, நூலக பயன்பாடுகள் குறித்து ஏர்வாடி கிளை நூலகத்தின் நூலகர் பாலசோமநாதன் மாணவர்களிடம் உரையாற்றினார். ஆசிரியர் செந்தில்நாதன் வாசிப்புப் பழக்கத்தின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியாக மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை, புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அப்துல் கலாம் வழங்கிய உறுதிமொழியை ஏற்றனர்.
நிறைவாக, ஆசிரியர் நோவா ஐஸ்டன் நன்றி கூறினார்.
இப்பள்ளியில் 2016-ல் 76 மாணவர்களும், 2017-ல் 62 மாணவர்களும், 2018-ல் 56 மாணவர்களும், இந்த ஆண்டு 56 மாணவர்கள் என இதுவரை மொத்தம் 250 மாணவர்கள் அப்துல் கலாம் பிறந்த நாளில் நூலக உறுப்பினர்களாக இணைந்து புத்தகங்களை படித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT