Published : 16 Oct 2019 10:48 AM
Last Updated : 16 Oct 2019 10:48 AM
கோவை
சாட்டைக் குச்சி ஆட்டம் என்றழைக் கப்படும் மறந்துபோன கிராமியக் கலையை மாணவர்களுக்கு கற்பித்து நினைவூட்டி வருகிறார், அரசு பள்ளி ஆசிரியை ப.சுகுணாதேவி. 'டன்டனக்கு, டன்டனக்கு, டன்டனக்கு, டன்டனக்கு' என ஆசிரியை ஒருவர் பறை இசைக்க, ஒன்னு,ரெண்டு, மூனு, நாலு, அஞ்சு,ஆறு, ஏழு, ஹேய்! என கோஷமிட்டவாறு மாணவர்கள் கைகளில் சாட்டைக் குச்சிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்தனர், கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள ஒன்னிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில். அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளை, மாணவர்களுக்குக் கற்பித்து வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இப்பள்ளியின் கணித ஆசிரியை ப.சுகுணாதேவி.
பாரம்பரியக் கலை “நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரங்களை மீட்டெடுக்கும் வகையில், மத்திய அரசு சார்பில், டெல்லியில் உள்ள கலாச்சார மற்றும் பயிற்சி மையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அளித்த பயிற்சியில் பங்கேற்றேன். அங்கு அழிந்து வரும் கலைகளை மீட்டெடுப்பதற்கு குறித்து பயிற்சி பெற்று, கடந்த 3 ஆண்டுகளாக பாரம்பரியத்தை கல்வி முறையுடன் இணைக்கும் திட்டத்தை செயல் படுத்தி, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாரம்பரிய கலைகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறேன். தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள், அதிகளவில் பிரபலமடையாத கலைகளுள் ஒன்று, இந்த சாட்டைக் குச்சி ஆட்டம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் உள்ள மக்கள், சாட்டைக் குச்சி ஆட்டத்தை பாரம்பரியமாக ஆடி வந்ததாகக் கூறப்படுகிறது. மாடு மேய்ப்பதற்கும், மாட்டு வண்டி ஓட்டுவதற்கும், விவசாயிகள் வயலில் உழவு ஓட்டுவதற்கும் பயன்படுத்தி வந்த சாட்டைக் குச்சிகளை பயன்படுத்துகின்றனர். ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்குவதற்காகவும், உழைத்த களைப்பு நீங்கவும் சாட்டைக் குச்சியைக் கொண்டு நடனமாடி மகிழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நடனத்தில் பல்வேறு அடவு முறைகள் உள்ளன.
இதில் அடிப்படை அடவு முறைதான் எண்களைச் சொல்லி, ஒவ்வொருக் கொருவர் கையில் உள்ள சாட்டைக் குச்சிகளைத் தட்டி ஒலி எழுப்பி ஆடுவது. இதேபோல் பதித்து ஏறுதல், துள்ளல், எய்தல், குத்துச்சண்டை, கும்பி ஆகிய அடவுகள் உள்ளன. இவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். அவர்களும் ஆர்வமுடன் கற்று வருகிறார்கள். பள்ளி விழாக்களிலும், வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் எங்கள் மாணவர்கள் இந்நடனத்தை ஆடி வருகின்றனர்” என்றார், ஆசிரியை ப.சுகுணாதேவி.
கல்வியுடன் கலைகள்சாட்டைக் குச்சி நடனம் மட்டுமின்றி கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றநடனங்களையும், பாரம்பரிய விளையாட்டுகளையும் மாணவர்களுக்குக்கு கற்றுத் தருகிறார். மாணவர்களுடன் நடனமாடி உற்சாக மூட்டி வருகிறார். தான் பெற்ற பயிற்சியை, மாணவர்களுக்கும் கற்பித்து, கலைகள் வளர்ச்சி அடைவது குறித்து, திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்து வருகிறார். மாணவர்களுக்கு கல்வியுடன், கலைகளையும் கற்பிக்கும் இந்த கணித ஆசிரியை பாராட்டுக்குரியவர்.
- த.சத்தியசீலன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT