Published : 16 Oct 2019 10:31 AM
Last Updated : 16 Oct 2019 10:31 AM
நாகப்பட்டினம்
பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த உதவும் வகையில் ‘வெற்றிக்கொடி’ நாளிதழ் அமைந்திருப்பதாக நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.குணசேகரன் பாராட்டு தெரிவித்தார்.
நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை- வெற்றிக்கொடி’ நாளிதழை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி குணசேகரன் திங்கள்கிழமை வழங்க, அதைபள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு ‘வெற்றிக்கொடி’ நாளிதழ் விநியோகிக்கப்பட்டது. அவற்றை மாணவர்கள் ஆர்வத்தோடு வாங்கி வாசித்தனர்.
பின்னர் முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘தற்போது பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் புத்தகங்களை வாசிப்பதை விட பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்ட்ராகிராம் என சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அன்றாட அரசியல், நாட்டு நடப்புகள் தெரியாமல் போய் விடுகிறது. நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பதால், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியும். அதோடு, போட்டித் தேர்வுக்கு தேவையான அத்தனை தகவல்களும் கிடைக்கும். மாணவர்களிடம் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ‘வெற்றிக்கொடி’ நாளிதழை வழங்கி உள்ள ‘இந்து தமிழ் திசை’யை பாராட்டுவோம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT