Published : 15 Oct 2019 09:29 AM
Last Updated : 15 Oct 2019 09:29 AM

வீட்டில் இருந்தபடியே விவசாய பணிகளை கவனிக்க இயந்திரம்: வத்தலகுண்டு பள்ளி மாணவர் சாதனை 

வத்தலகுண்டு மகாலெட்சுமி பள்ளியில் அலைபேசி மூலம் கட்டுப்படுத்தி விவசாயப் பணிகளை செய்யும் கருவியை செயல்விளக்கம் செய்து காண்பித்த செக்காபட்டி கிராம அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கணேஷ்குமார்.

திண்டுக்கல்

வீட்டில் இருந்தே செல்போன் மூலம் கருவிகளைக் கட்டுப்படுத்தி பல்வேறு பணிகள் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியும் என்பதை அறிவியல் கண்காட்சியில் செயல் விளக்கம் செய்து காண்பித்தார் அரசு பள்ளி மாணவர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டு அருகே செக்காபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் கணேஷ்குமார். இவர் வத்தலகுண்டு மகாலெட்சுமி பள்ளியில் நடைபெற்ற கல்வி மாவட்டத்துக்குட்பட்ட 40 பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியில் தனது படைப்பைக் காட்சிப்படுத்தினார்.

‘வீட்டில் இருந்தே விவசாயம் பார்க்கலாம்’ என்ற தலைப்பில் இயந்திரம் ஒன்றை உருவாக்கி அதன் செயல் விளக்கம் அளித்தார். வீட்டில் இருந்து அலைபேசி மூலம் தோட்டத்தில் உள்ள இயந்திரத்தைப் பல்வேறு பணிகளை செய்ய வைக்க முடியும் என்பதை கல்வி அதிகாரிகள், மாணவர்களுக்கு செய்து காண்பித்தார்.

மாணவர் கணேஷ்குமார் கூறுகையில், உழவு ஓட்டுதல், விதை போடுதல், களை வெட்டுதல், சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட பணிகளை வெவ்வெறு வகையில் அலைபேசியை இயக்கி இந்த இயந்திரத்துக்கு கட்டளைபிறப்பிக்கலாம்.

அதில் உள்ள கேமரா மூலம் அதன் செயல்பாடுகளை வீட்டில் இருந்தே கண்டறியலாம். இக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் தோட்டத்துக்குச் செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே விவசாயப் பணிகளை கவனிக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x