Published : 15 Oct 2019 09:24 AM
Last Updated : 15 Oct 2019 09:24 AM
மதுரை
மதுரை மாவட்டம் அ.செட்டியார்பட்டி யில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் சதுரங்கப் போட்டிகளில் அசத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் மட்டும் சாத்தியப்படும் சதுரங்கம், அரசுப் பள்ளிக்கு வந்தது எப்படி? என்றால் அனைத்து மாணவ, மாணவிகளும் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஞா.செந்தில்குமாரை நோக்கி கைகளை நீட்டுகின்றனர். அரை மணி நேரத்துக்கு முன்பே பள்ளிக்கு வந்துவிடும்.
இவர் மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி தொடங்கும் வரை சதுரங்கப் பயிற்சி அளிக்கிறார். அடுத்து உணவு இடைவேளை, பின்னர் பள்ளி முடிந்ததும் சதுரங்கப் பயிற்சியை தொடர்கிறார். இத்துடன் நின்று விடாமல் மாணவ, மாணவிகளைப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
அரசு பள்ளி மாணவ, மாணவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக சதுரங்கப் பயிற்சி அளித்து வரும் செந்தில்குமார், தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளை இது வரை மாவட்டம், மாநிலம், தேசம், சர்வதேசம் அளவில் நடைபெற்ற 150 போட்டிகளுக்கு மேல் அழைத்துச் சென்றுள்ளார். இவர்களில் 6 பேர் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தகுதிப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் கனவு ஆசிரியர் விருது செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலாம் கண்ட கனவு பள்ளி ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஆசிரியர் செந்தில்குமார் கூறியதாவது:
தொடக்கப் பள்ளிகளில் எந்த விளையாட்டும் கற்பிக்கப்படாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரங்கம் கற்பிக்க அரசு உத்தரவிட்டது. சதுரங்க விளையாட்டு குறித்து எதுவும் தெரியாமல் இருந்த அரசு பள்ளி மாணவர்கள் தற்போது சதுரங்கத்தில் சாதனை படைத்து வருகின்றனர்.
சதுரங்கம் மூளையின் ஆற்றலைப் பெருக்கும் ஒரு விளையாட்டு. பிரச்சினைகளை சமாளிக்க யுக்தியை கண்டு பிடிக்கலாம். சதுரங்கம் என்றாலே பிரச்சினை தான். அதை சுலபமாகக் கையாளும்போது வாழ்வில் வரும் இடையூறுகளை எதிர்கொள்ள முடியும் என்றார் நம்பிக்கையுடன்.
- கி.மகாராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT