Published : 15 Oct 2019 09:17 AM
Last Updated : 15 Oct 2019 09:17 AM
ராமநாதபுரம்
பரமக்குடி கல்வி மாவட்ட அளவிவான 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி, கணித கருத்தரங்கம், அறிவியல் பெருவிழா பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பரமக்குடி கல்விமாவட்ட அலுவலர் எஸ்.கருணாநிதி கண்காட்சியை தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பால்கண்ணன், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் கல்பனாத்ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்த் வரவேற்றார். இதில் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு, மின்சார அலார மணி, மரம் நடுதல் ஆகியவற்றை விளக்கும் வகையில் 500 மாணவர்களின் 87 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளித் தாளாளர் திரவியம், தலைமை ஆசிரியர் தன மேரி, கீழ முஸ்லிம் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்ட பூபதி நன்றி கூறினார்.
மேலும், மண்டபம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிப் பெருவிழா, ராமநாதபுரம்முகமது சதக்தஸ்தகிர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தார். முகமது சதக்தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எஸ்.நந்த கோபால் முன்னிலையிலும் நடைபெற்றது. இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.டேவிட் மோசஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எ.புகழேந்தி, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார். கண்காட்சியில் 110 அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 560 மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளை வைத்து விளக்கினர்.
ஏராளமான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு சித்தா மருத்துவமனையுடன் இணைந்து, நில வேம்புக் கசாயம் வழங்கப்பட்டது. மண்டபம் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் எஸ்.ராமமூர்த்தி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT