Published : 20 Jul 2023 04:35 AM
Last Updated : 20 Jul 2023 04:35 AM
கோவை: வாக்களிப்பதன் முக்கியத்துவம், தேர்தலின் அவசியம், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பொறுப்புகளை இளம் வயதிலேயே மாணவர்களின் மனதில் பதியும் வகையில், மாதிரி பேரவை தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது கோவை கீரணத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தற்போது இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 278 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே வாக்காளர்களாக மாறி,மாதிரி பேரவை தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
முதலமைச்சர், நிதியமைச்சர், கல்வி,சுகாதாரம், கலைத்துறை, சட்டம்-ஒழுங்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் என மொத்தம் 7 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு பதவிக்கும் தலா மூவர் என மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர்.
முதல்வர் பதவிக்கு 8-ம் வகுப்பு மாணவர்களும், மற்ற பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுடன் 6, 7-ம்வகுப்பு மாணவர்களும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், வகுப்பு அச்சிடப்பட்ட தாள், அனைத்து வாக்காளர்களிடமும் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடியில், வாக்காளர்களின் பெயர்,விவரம் சரிபார்க்கப்பட்டு, மை வைக்கப்பட்டது. பின்னர், தங்களுக்கு பிடித்தவேட்பாளர் பெயர் உள்ள கட்டத்தில் ‘டிக்’ செய்து வாக்கு பெட்டியில் வாக்குச்சீட்டை மாணவர்கள் செலுத்தினர். வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் நேற்று மாலை வெளியாகின.
இதுதொடர்பாக தலைமையாசிரியர் ஜெபலான்ஸி டெமிலா கூறியதாவது: மாணவர்களின் தலைமைப்பண்பை வளர்க்கவும், பொறுப்புகளை ஏற்று நடத்தும் பக்குவம் பெறவும் வகையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், முதல்வராக மாணவி ஏஞ்சல், கல்வித்துறை அமைச்சராக மாணவி தனுசுயா, சுகாதாரத்துறை அமைச்சராக மாணவி பிரதிகா ஸ்ரீ, விளையாட்டு துறை அமைச்சராக மாணவி லத்திகா ஸ்ரீ, கலைத்துறை அமைச்சராக மாணவி ஹெப்சி, சட்டம்-ஒழுங்கு அமைச்சராக மாணவர் ஜிவன், நிதித்துறை அமைச்சராக நெகேமியா ரித்திஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் அவர்களது துறைகள் பொறித்த ‘பேட்ச்’ வழங்கப்பட்டது.
முதல்வராக பொறுப்பேற்கும் மாணவர், அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் மேற்பார்வையிடுவார். கல்வித்துறை அமைச்சருக்கு கீழ் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள், தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்கள் சரியாக வீட்டுப் பாடங்களை மேற்கொள்கிறார்களா, அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதை அறிந்து கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவிப்பார்கள். காலை கூட்டத்துக்கு மாணவர்கள் வரிசையாக வருகின்றனரா, சீருடை சரியாக அணிந்துள்ளனரா என்பது போன்ற பணிகளை சட்டம்-ஒழுங்கு துறை அமைச்சர் கண்காணிப்பார்.
மாணவர்களின் சுத்தம், பள்ளி வளாகதூய்மை போன்றவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் நிர்வகிப்பார். நேர்மைஅங்காடியை நிர்வகிக்கும் பொறுப்புநிதி அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலைத்துறை அமைச்சர்கள் பள்ளியில் நடைபெறும் போட்டிகள், நிகழ்வுகளை ஆசிரியர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பர். இந்த நிகழ்வை நடத்த தேவையான உதவிகளை பாஸ் நிறுவனம், ‘ராக்’ அமைப்பு ஆகியவை அளித்தன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT