Published : 16 Nov 2022 06:09 AM
Last Updated : 16 Nov 2022 06:09 AM
தென்காசி: தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் மாலதி, உலக சாதனை படைக்க கடந்த 4 மாதங்களாக சில மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தின் தனிமங்களின் பெயர்களை ஒப்பிக்க பயிற்சி அளித்தார். தனிமங்களின் பெயர்களை கூறிக்கொண்டே சிலம்பம் சுற்றுதல், செல்போனில் வீடியோ எடிட் செய்தல், ரோபோட்டிக் கார் செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளிக்கு வந்து, மாணவ, மாணவிகளின் மேற்கண்ட சாதனையை பதிவு செய்தனர்.
கர்ணா என்ற 8-ம் வகுப்பு மாண வர் கழற்றிய நிலையில் உள்ளரோபோட்டிக் காரை மீண்டும் இணைத்தபடி தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களையும் 55 விநாடிகளில் ஒப்பித்தார். 60 சதவீத அறிவுசார் மாற்றுத் திறனாளியான சைபுல் இஸ்லாம் என்ற 8-ம் வகுப்பு மாணவர் தனிம அட்டவணை வரிசையில் உள்ள 20 தனிமங்களை 25 விநாடிகளில் ஒப்பித்துள்ளார்.
மகேஸ்வரி என்ற 8-ம் வகுப்பு மாணவி செல்போனில் காணொலியை எடிட் செய்தவாறு தனிம அட்டவணை வரிசையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 45 விநாடிகளிலும், சக்தி பிரபா என்ற 8-ம் வகுப்பு மாணவி சிலம்பம் சுற்றியவாறே 118 தனிமங்களை 50 விநாடிகளிலும் ஒப்பித்துள்ளனர். இவர்களின் உலக சாதனை முயற்சியை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், மண்டலத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT