Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM
தமிழில் உள்ள ஆத்திச்சூடி, நன்னூல் போன்ற நீதி நூல் மற்றும் இலக்கிய வரிகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுதி கோவையை சேர்ந்த மாநகராட்சி பள்ளி மாணவி அசத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் கே.செல்வக்குமார். இவருக்கு, மனைவி ஜீவிதா மற்றும் இரு மகள்கள் உள்ளனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வரும் செல்வக்குமார், ஜீவிதாவின் படிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்குடும்பத்துடன் கோவை இராமலிங்கம் காலனிக்கு குடி பெயர்ந்துள்ளார். பிள்ளைகளை அதே பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளார். மூத்த மகள் மோஷிகா (8) இராமலிங்கம் காலனி மாநகராட்சி தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி படிப்பு தொடக்கம் முதலே தமிழ் எழுத்துகளை திருப்பி எழுதுவது போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தி வந்த மோஷிகா, கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மூடப்பட்ட காரணத்தால் வீட்டில் தனது தாயார் உதவியுடன் கல்வி மற்றும் கூடுதலாக பிற மொழிகளில் எழுதுதல் போன்றவற்றை கற்றுக் கொண்டுள்ளார்.
அவ்வாறாக கற்றுக் கொண்டவர் பெற்றோர் வழிகாட்டுதலின்படி தமிழி எனப்படும் பண்டைக் காலதமிழ்ப் பிராமி எழுத்து முறைகளையும் கற்றுக் கொண்டுள்ளார். தொடர்ந்து கற்றுக் கொண்டதன் அடிப்படையில் நீதி நூல்களான ஆத்திச்சூடி, மூதுரை, இலக்கிய நூலான நன்னூலில் உள்ள வரிகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுதி தமிழி என்ற பெயரில் தமிழ்ப் பிராமி எழுத்து கற்றல் கையேடு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவரது செயல்பாட்டையும், ஆர்வத்தையும் அறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சிஅலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாணவி மோஷிகாவை அவரது பெற்றோருடன் நேரில் அழைத்து பாராட்டியதுடன், மாணவியின் கற்றல் திறனைவளர்க்க உதவும் வகையில் கையடக்க கணினி ஒன்றையும் அன்பளிப்பாக அளித்தார். மாநகராட்சி ஆணையரின் பாராட்டுக்குப் பிறகு மாணவி மோஷிகாவின் செயல்பாடு குறித்து றிந்த பலரும் அவருக்கு பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிகழ்வுக்குப் பிறகு மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள வளாக சுற்றுச்சுவர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் எழுத்துகள்மற்றும் அவற்றுக்கான தமிழ்ப் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிறுமியின் தந்தைகே.செல்வக்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘பேருந்துகளில் பயணம் செய்யும்போது, பேருந்து கண்ணாடிகளில் மாறுபட்ட வடிவத்தில் தெரியும் எழுத்துகளை ஆரம்பத்தில் படிக்கத் தொடங்கினார். சில நாட்களில் தமிழ் எழுத்துக்களை இடதுபுறமாக இருந்து எழுதினார். பிறகு தாயாரின் வழிகாட்டுதலின்படி தமிழ்ப் பிராமி எழுத்துகள் குறித்து அறிந்து கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் சுயமாக தமிழ் எழுத்துகளுக்கான தமிழ்ப் பிராமிகுறியீடு, வாக்கியங்களை எழுதப்பழகி விட்டார். அடுத்து திருக்குறளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுத முயற்சித்து வருகிறார்’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT