Published : 04 Aug 2021 06:13 PM
Last Updated : 04 Aug 2021 06:13 PM
மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் 2022 தேர்வுக்கு ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்.
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் கேட் நுழைவுத்தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்துகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. இந்தத் தேர்வில் புதிதாக 2 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புவிசார் பொறியியல் - GE (Geomatics Engineering) மற்றும் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல்சார் பொறியியல் - NM (Naval Architecture and Marine Engineering) ஆகிய 2 தாள்கள் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம்.
இந்நிலையில் கேட் 2022 தேர்வுக்கு ஆக.30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசித் தேதி ஆகும். தாமதக் கட்டணத்துடன் சேர்த்து, அக்டோபர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 1 கடைசித் தேதி ஆகும். அதேபோலத் தாள்கள் மாற்றம், தேர்வு மையம் மாற்றம் ஆகியவற்றைக் கூடுதல் கட்டணத்தோடு மேற்கொள்ள நவம்பர் 12 கடைசித் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT