Published : 21 Jun 2021 09:13 PM
Last Updated : 21 Jun 2021 09:13 PM
கரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பை மீட்டெடுக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் இலவசப் பாடசாலைகளை தொடங்கி நடத்திவருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுமையாக பள்ளிகள் இயங்கவில்லை. இந்த ஆண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தாலும், கிராமப்புற ஏழை மாணவர்களிடம் செல்ஃபோன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புக்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அவலநிலையும் கிராமப்புறங்களில் நடந்துவருகிறது.
இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மீட்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், வேடசந்தூர் அருகேயுள்ள கிராமப்பகுதிகளில் இலவச பாடசாலைகளை தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவிலூர் அருகே நாகையன்கோட்டையில் உள்ள இலவச பாடசாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை உறுப்பினர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திவருகின்றனர்.
கல்லூரியில் படித்துவரும் மாணவி, வினிதா, பட்டதாரி சுகுமார், கல்வியியல் பட்டதாரி ஜாஸ்மின் ஆகியோர் நாகையன்கோட்டை மாணவர்களுக்கு பாடம் நடத்தி அவர்களின் கல்வி வளர்ச்சியில் முனைப்பு காட்டிவருகின்றனர்.
எரியோடு அருகே அச்சனம்பட்டியில் தொடங்கப்பட்ட இலவச பாடசாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய துணைச்செயலாளர் பாண்டியராஜன், கல்லூரி செல்லும் மாணவர் தங்கபாண்டி ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் நடத்திவருகின்றனர்.
வங்கலாபுரம் கிராமத்தில் நடந்த பாடசாலை தொடக்க நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு பட்டதாரிகள் பாடம் நடத்துகின்றனர். இதேபோல் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் மாணவர்களின் கல்வியை மீட்க இலவச பாடசாலைகளை தொடங்க உள்ளதா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT