Last Updated : 06 Oct, 2020 03:17 PM

 

Published : 06 Oct 2020 03:17 PM
Last Updated : 06 Oct 2020 03:17 PM

போட்டாபோட்டி: வேளாண் படிப்புகளில் சேர 4,700 இடங்களுக்கு 48,820 பேர் விண்ணப்பம்- அக்.15-ல் தரவரிசைப் பட்டியல் 

துணைவேந்தர் என்.குமார்

கோவை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 4,700 இடங்களுக்கு 48,820 பேர் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் அக்.15-ம் தேதி வெளியாகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், தமிழகத்தில் 14 உறுப்புக் கல்லூரிகளும் 28 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இக்கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை, பி.டெக். வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம் ஆகிய 10 இளநிலைப் பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளின் முதலாமாண்டில் உறுப்புக் கல்லூரிகளில் 1,600 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 3,100 இடங்களும் என மொத்தம் 4,700 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை 2020-2021 ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்காக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்காகக் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் www.tnauonline.in என்ற இணையதளம் வழியாக வரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த செப். 17-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அக்.5-ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நேற்று இரவுடன் நிறைவு பெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் கூறியதாவது:
''வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிகள், தோட்டக்கலைக் கல்லூரிகள் மற்றும் வனக் கல்லூரிகளில் சேர நேற்று (அக். 5) இரவு 11.59 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அப்போது 18,701 மாணவர்களும், 22,833 மாணவிகளும் என 48,420 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். 4,700 இடங்களுக்கு 48,420 பேர் விண்ணப்பித்துள்ளனர். மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும்.

இதன் தொடர்ச்சியாக வரும் அக்.15-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றே கலந்தாய்வு விவரங்களும் அறிவிக்கப்படும். இதற்கிடையில் கலந்தாய்வுக்காக மாணவர்களின் சான்றிதழ்களும் இணைய வழியில் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x