Published : 29 Sep 2020 03:50 PM
Last Updated : 29 Sep 2020 03:50 PM
புதுச்சேரியிலுள்ள நான்கு பிராந்தியங்களில் அரசு, தனியார் ஐடிஐக்களில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஐந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), காரைக்காலில் இரண்டு, மாஹே, ஏனாமில் தலா ஒரு அரசு ஐடிஐக்கள், 6 தனியார் ஐடிஐக்கள் என மொத்தம் 15 ஐடிஐக்கள் உள்ளன. புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இவை இயங்குகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறும் முறை நடப்பாண்டு அமல்படுத்தப்பட்டது.
இதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து கடந்த 25-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 953 பேர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரத் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலை ஆன்லைன் சேர்க்கைக் குழுவின் முதன்மை அதிகாரி சரவணன், தொழிலாளர் துறைச் செயலாளர் வல்லவனிடம் இன்று வழங்கினார். தேர்வான மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சிப் பிரிவு, அணுக வேண்டிய நாள், நேரம் மற்றும் சேர வேண்டிய தொழிற்பயிற்சி நிலையத்தின் விவரம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்குத் தற்காலிக சேர்க்கை ஆணை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் தங்களுடைய விருப்பமான பயிற்சிப் பிரிவை அளிக்கும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்ளலாம். மற்ற தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சிப் பிரிவு ரத்து செய்யப்பட்டு வேறு மாணவர்களுக்கு அளிக்கப்படும். குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் கிடைக்கப்பெறாத மாணவர்கள் அதுகுறித்து வருந்தாமல் தங்களுக்கு அருகில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் சென்று தற்காலிகச் சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.
தரவரிசை மற்றும் சேர்க்கைப் பட்டியல் புதுச்சேரி சென்டாக் இணையத்தில் ஐடிஐ அட்மிஷன் பிரிவில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT