Published : 07 Sep 2020 02:22 PM
Last Updated : 07 Sep 2020 02:22 PM
கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக சென்னை ஐஐடியில் பயிற்சி வேலைவாய்ப்புக்கான தேர்வு முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் வகுப்புகள் அனைத்டும் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் முதல்முறையாகப் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் (இண்டர்ன்ஷிப்) முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது.
இதில் சர்வதேச மற்றும் தலைசிறந்த இந்திய நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த முகாமின் முதல் நாளில் 20 நிறுவனங்கள் 152 மாணவர்களுக்கு இண்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்கின. குறிப்பாக மைக்ரோசாஃப்ட் இந்தியா, கூகுள், ருப்ரிக் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், ஜானே ஸ்ட்ரீட் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 2021 கோடை காலத்துக்கான இண்டர்ன்ஷிப் பயிற்சிக்காக மாணவர்களைத் தேர்வு செய்தன.
இதற்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் காணொலிக் காட்சி வழியாகவே நடைபெற்றன. இதுகுறித்து சென்னை ஐஐடி தரப்பில் கூறும்போது, ''எங்களுடைய மாணவர்கள் தொலைதூரத்திலும் இருப்பதால் இணைய வசதியையும், வேகத்தையும் பொருட்படுத்த வேண்டாம் என்று நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படியே தேர்வுகள் நடைபெற்றன'' என்று கூறப்பட்டுள்ளது.
ஐஐடி வேலைவாய்ப்புக் குழு மற்றும் இண்டர்ன்ஷிப் மாணவர்கள் குழு ஆகிய இரண்டும் இணைந்து பல்வேறு சமூக வலைதளங்களுடன் இணைந்து ஆன்லைன் தேர்வுகளை நடத்தின.
ஐஐடி கல்விப் பாடத்திட்டத்தின்படி, பி.டெக்., எம்.டெக். மாணவர்களுக்கு இண்டர்ன்ஷிப் பயிற்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT