Published : 20 Aug 2020 01:49 PM
Last Updated : 20 Aug 2020 01:49 PM
சத்தியமங்கலம் செண்பகப்புதூர் அருகே உள்ள போயே கவுண்டனூர் காலனிக்குள் நுழையும்போதே குழந்தைகளின் மழலை மொழியில் தமிழமுதம் ஒலிக்கிறது.
“தோன்றுகின்றபோதெல்லாம் சுரக்கின்ற செந்தமிழே வேண்டுகின்றபோதெல்லாம் விளைகின்ற நித்திலமே…” என்று தொடங்கும் மூன்றாம் வகுப்புப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறார் அந்த ஆசிரியை. ஓர் ஒதுக்குப்புற மரத்தடியில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அமர வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், ஆசிரியை சொல்வதை அடி மாறாமல் திருப்பிச் சொல்கின்றனர்.
மிகவும் இளையவராகத் தெரிந்த அந்த ஆசிரியையிடம் பேசிய பின்னர்தான் தெரியவந்தது, அவர் ஆசிரியை அல்ல; கல்லூரி மாணவி என்று. காலை முதல் மாலைவரை குழந்தைகளுக்கு அங்கு பாடம் நடத்தி வருகிறார்.
சத்தியமங்கலம் போக்குவரத்து நகர் அருகே உள்ள குட்டை மேட்டூரில் இதே போன்ற காட்சி. அங்கே தெருவே திறந்தவெளிப் பள்ளிக் கூடமாகியிருந்தது. தனிமனித இடைவெளியுடன் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு அங்கேயும் ஒரு கல்லூரி மாணவி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அங்கு குடியிருக்கும் ஏழை எளிய மக்கள், ‘இப்படியாவது நம்ம புள்ளைக படிப்புக்கு விடிவு வந்ததே’ எனப் பேசிக்கொள்கிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே சத்தியமங்கலம் சுற்றுவட்டாரம் தொடங்கி பர்கூர் மலைக்காடுகள் வரை தெருதோறும் இப்படியான பள்ளிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ‘சுடர்’ தன்னார்வ அமைப்பின் நடராஜ். இதன் பின்னணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.
நல்ல விஷயங்கள் தொடங்குவதற்கும் அற்புதமான தருணம் அமைய வேண்டும் அல்லவா! சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்தபோதுதான் இதற்கான தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை ஆசிரியை, “நம் பிள்ளைகள் படிக்காமல் வீட்டிலேயே இருப்பது பெரும் மன வருத்தத்தைத் தருகிறது. 5 மாதங்களாக நாங்கள் சம்பளம் வாங்குவது மனசாட்சியைக் கொல்கிறது. அதற்காகவேனும் என் சம்பளத்தில் ஒரு தொகையை ஒதுக்கி நம் பிள்ளைகளை அந்தந்தப் பகுதியிலேயே படிக்க வைக்கலாம் என நினைக்கிறேன். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்.
கரோனா காலத்தில் வெளியூரிலிருந்து வந்து பாடம் நடத்துவது ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். அதனால் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த உங்கள் பகுதியிலேயே கல்லூரி மாணவ - மாணவிகளைத் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்கு ஊதியமாக ரூ.2,000 அல்லது ரூ.3,000 நானே தந்துவிடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
பலரும் அதை ஆமோதிக்க, ஓரிருவர் எதிர்ப்பும் காட்டியிருக்கின்றனர். “இப்படி செய்து, ஏதாவது சிக்கல் வந்துவிட்டால் நாங்கள்தானே பதில் சொல்ல வேண்டி வரும்? உங்களுக்கும் சிக்கல் வரும்” என்றெல்லாம் ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவரே பேசியிருக்கிறார். ஆனால் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், தலைமை ஆசிரியையின் யோசனை ஒருமனதாக வரவேற்றனர். இதையடுத்தே தெருப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உத்வேகத்துடன் இயங்கிவருகின்றன.
இப்படியான தெருப் பள்ளிக்கு வித்திட்ட தலைமை ஆசிரியையிடம் பேசினேன். தன்னைப் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் பேசத் தொடங்கினார்.
“எங்க பள்ளிக்கூடத்துல 25 பசங்க படிக்கிறாங்க. அவங்களுக்குத் தொலைக்காட்சி வழியா பாடங்கள் வருது. அத்துடன் நீங்களும் வீட்ல இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே என்று பெற்றோரைக் கேட்டால், ‘நாங்க கூலி வேலைக்குப் போறவங்க, எங்களுக்கு ஏது நேரம்?’னு சொன்னாங்க. இப்படியிருந்தா குழந்தைகளோட படிப்பு என்ன ஆகும்னுதான் அந்த ஊர்ப் பெரியவங்ககிட்ட சொன்னேன். அவங்களும் என்கிட்ட படிச்சவங்கதான். சொன்னதும் ஏத்துட்டாங்க.
குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் கல்லூரி மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலமா நான் வழிகாட்டறேன். எங்க பள்ளிக்கூட குழந்தைகள் ரெண்டு ஊர்ல வசிக்கிறாங்க. ரெண்டு இடத்துக்கும் வகுப்புகள் போட்டாச்சு. மேலும் ரெண்டு ,மூணு பள்ளிக்கூடத்துக்கும் நான் உதவலாம்னு இருக்கேன்” என்றார்.
இதுகுறித்து ‘சுடர்’ நடராஜன் கூறுகையில், “சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மட்டுமல்ல, பர்கூர் மலைகிராமங்களிலும் இந்தத் தெருப் பள்ளிகளை உருவாக்க முயற்சி எடுத்துட்டு வர்றோம். இதற்கு உதவுமாறு சில ஆசிரியர்களிடம் போய் கேட்டோம். அவர்கள் பலர் மேலதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எங்களால் உதவ முடியாது என்று சொல்லி ஒதுங்கிக்கொள்கிறார்கள். அதையும் மீறி இப்போது இண்டு ஆசிரியர்கள் உதவ முன்வந்திருக்கிறார்கள்.
‘ஒருவேளை, பள்ளிக்கூடம் திறந்துட்டாக்கூட இந்த வகுப்புகளை ட்யூஷனா மாற்றி, பாடம் எடுக்கும் பெண்களுக்கு மதிப்பூதியம் கொடுப்போம்’னு உத்திரவாதம் கொடுத்திருக்காங்க. இப்படி பொறுப்பேற்றுக்கொள்ள வரும் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குமாறு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் அவர்.
குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறக்க உதவும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க பள்ளிக் கல்வித்துறை முன்வரும் என்று நம்புவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT