Published : 10 Aug 2020 07:12 AM
Last Updated : 10 Aug 2020 07:12 AM
விமானவியல் துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதிநவீன வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி நேரடியாக ‘தொழிற்புரட்சி 5.0’-க்குசெல்ல இந்தியா தயாராக வேண்டும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்,தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF) உடன்இணைந்து நடத்திய ‘பறக்கலாம் வாங்க’ (லெட்ஸ் ஃபிளை) என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் விஞ்ஞானி வெ.பொன்ராஜ் தெரிவித்தார்
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் இணையம் வழியாக பல்வேறுசெயல்பாடுகளை ’இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து ‘பறக்கலாம் வாங்க’ என்ற இணைய வழியிலான நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதில், விமானவியல் துறையில்உள்ள படிப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் இத்துறை தொடர்பான பல்வேறு பயனுள்ள தகவல்கள் குறித்து மூத்த அறிஞர்கள் உரையாற்றி வருகின்றனர்.
கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்வில் விஞ்ஞானி வெ.பொன்ராஜ், ‘சிவில்விமானவியல்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பு’ குறித்து பேசினார்.அவர் கூறியதாவது:
பறக்க வேண்டும் என்ற கனவைமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்துதான் பெற்றேன். அவருடனே பணிபுரிவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. 1995-ல் போர் விமானப் பிரிவில் விஞ்ஞானி-சி பணியில் சேர்ந்த காலகட்டத்தில் ஏவுகணை, அணுசக்தி உற்பத்தியில் இந்தியாசுயசார்பு நிலையை அடைந்திருந்தது. அடுத்து சிவில் விமானவியலில் இந்தியா தற்சார்பு நிலை அடைய நான் உழைக்க வேண்டும் என்கிற உந்துதலை கலாம் எனக்கு ஊட்டினார். உடனடியாக அந்த பணியில் இறங்கினோம்.
மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality System) குறித்து இன்று பெரிதும் பேசப்படுகிறது. இதை 25 ஆண்டுகளுக்கு முன்பேபாதுகாப்புத் துறை சோதனை முறையில் பயன்படுத்த தொடங்கி விட்டது. ஆங்கிலேயர்களிடம் 400 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, நாற்பதே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பாக, புகழ்பெற்ற ராணுவ விஞ்ஞானிகளான ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், டாக்டர் டி.எஸ்.கோத்தாரி, சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்றவர்களால் நமது பாதுகாப்புத் துறை உச்சத்தை தொட்டது.
எதிர்காலத்துக்கான தொழில்நுட்பங்கள் நம் பாதுகாப்புத் துறையில் உயிர்பெறுகின்றன. அப்படியான ஒன்றுதான் ‘தொழிற்புரட்சி 5.0’. ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி முறைபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களால், மனிதர்களின் இடத்தை எந்திரங்கள் பறித்துக்கொள்ளும் என்ற அச்சம் உலகத்தைப் பிடித்துஆட்டுகிறது. ஆனால், ‘தொழிற்புரட்சி 5.0’-வில் மனிதர்களும், எந்திரங்களும் இணைந்து பணிபுரியும் சூழல் உருவாகும். இது ஆங்கிலத்தில் Collaborative RoboticSector எனப்படுகிறது. இதை மனதில் வைத்து, இந்தியா நேரடியாக‘தொழிற்புரட்சி 5.0’-க்குள் அடியெடுத்து வைக்க தயாராக வேண்டும். அதற்கு சிவில் விமானவியல் துறைசிறந்த தேர்வாக அமையும்.
2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு 2,300 விமானங்கள் தேவைப்படும். உள்நாட்டிலேயே விமானங்களை தயாரிக்கும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலாம் காலத்திலேயே 70-90இருக்கைகள் கொண்ட பயணிகள்ஜெட் விமானத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இது நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் மிகப் பெரிய பாய்ச்சலாக கருதப்படும். இதேபோல, விமானத் துறையில்3டி பிரின்ட்டிங் எனப்படும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பமும் வந்துவிட்டது. இதை பயன்படுத்தி விமான இறக்கை, இருக்கை உள்ளிட்ட பல பாகங்களை வடிவமைக்கும் முறை அறிமுகமாகி உள்ளது.
சூரிய ஆற்றலில் இயங்கும் எரிபொருள் இல்லா விமானம், கனமற்றவிமானம் உள்ளிட்ட பல புதிய வகைவிமானங்கள் விரைவில் வர உள்ளன. இதனால், விமானி, விமானதொழில்நுட்ப வல்லுநர், உள்வடிவமைப்பு நிபுணர் என பல்வேறு பணிவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. அதற்கு பிக் டேட்டா அனாலிசிஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மெய்நிகர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நம் இளைஞர்கள் தடம் பதிக்க வேண்டும்.
இவ்வாறு பொன்ராஜ் கூறினார்.
விமான பாகங்களை 3டி தொழில்நுட்பம் மூலம் கட்டமைத்தல், மெய்நிகர் தொழில்நுட்பம் கொண்டு பழுது பார்த்தல் போன்றவற்றை காணொலி காட்சிகள் மூலமாகவும் மாணவர்களுக்கு அவர் விளக்கிக்காட்டினார். நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT