Last Updated : 16 Jul, 2020 07:58 PM

2  

Published : 16 Jul 2020 07:58 PM
Last Updated : 16 Jul 2020 07:58 PM

தலைமையாசிரியரே இல்லை; 100 சதவீதத் தேர்ச்சி!- தடைகளைத் தாண்டி வென்ற பர்கூர் பழங்குடியினர் பள்ளி

ஈரோடு

50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், தலைமையாசிரியரும் இல்லாமல் ஆசனூர், பர்கூர் பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறையே 82 சதவீதம், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தடைகளைத் தாண்டிய சாதனையாகவே இதைக் கருதுகிறார்கள் கல்வியாளர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை மூலம் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகள் 20 உள்ளன. இப்பள்ளிகளில் சராசரியாக 50 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாகவே உள்ளன. இவற்றில் 3 உயர்நிலைப் பள்ளிகள், 2 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். இந்த 5 பள்ளிகளுக்கும் சில ஆண்டுகளாகத் தலைமையாசிரியர்களே இல்லை என்பதுதான் துயரம்.

“அப்படி இருந்தும்கூட மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த அளவு தேர்ச்சி பெற்றிருப்பது மிகச் சிறப்பான விஷயம். அரசு கூடுதல் கவனம் செலுத்தினால் இவர்களால் மேலும் பல சாதனைகளைச் செய்ய முடியும்” என்கிறார் பழங்குடி குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்திவரும் ‘சுடர்’ அமைப்பின் பொறுப்பாளர் நடராஜன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

''தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் 312 உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்குகின்றன. பொதுவாக, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் ஏஇஓ, டிஇஓ போன்ற அதிகாரிகள் வருவார்கள். அங்குள்ள மாணவர்களின் திறன், ஆசிரியர்களின் பாடம் சொல்லிக் கொடுக்கும் பாங்கு போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கையும் எடுப்பார்கள். ஆனால், பழங்குடியினர் நலத் துறை பள்ளிகளில் அவர்கள் பெயரளவுக்கு மட்டுமே கண்காணிப்பு செய்ய முடியும்.

பொதுவான பள்ளிகளில் ஆசிரியப் பணியிடங்களை பள்ளிக் கல்வித்துறையே நிரப்பும். ஆனால், இந்தப் பள்ளிகளில் பழங்குடியினர் நலத் துறையே பணியமர்த்த முடியும். இதற்கு மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலரே பொறுப்பு. அந்தத் துறையைப் பொறுத்தவரை பள்ளிகள் உட்பட 18 விதமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதனால் அந்த அலுவலரால் பள்ளிகளின் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்த முடிவதில்லை.

உதாரணமாக, பள்ளிக் கல்வித்துறை நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ரூ.7,500 சம்பளத்தில் ஒப்பந்தப் பணிக்கு ஆசிரியர்களை நேரடியாக நியமித்தார்கள். அது மாதிரி இங்கே செய்ய முடியவில்லை. இதனால் பழங்குடியினர் பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. மேலும், இங்கு பணியாற்றும் தலைமையாசிரியர், ஹாஸ்டல் வார்டன் பொறுப்பையும் கவனிக்க வேண்டும். மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்குவது, அவற்றின் பில்கள், கணக்கு எழுதி மாதந்தோறும் கொண்டுபோய் பழங்குடியினர் துறை அலுவலகத்தில் கொடுத்து அடுத்த மாதத்திற்கான செலவு விவரங்கள் பெறுவது போன்ற பணிகளிலேயே 80 சதவீத உழைப்பு காலியாகிவிடுகிறது.

இப்படியான காரணங்களால் ஈரோட்டில் மட்டும் 20 பள்ளிகளில் பாதிக்குப் பாதி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. ஆசனூர், பர்கூர் பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர் இல்லாத சூழல் ஆண்டுக்கணக்கில் நிலவுகிறது. இருக்கிற ஆசிரியர்களால் மாணவ - மாணவிகளின் மீது தனிப்பட்ட கவனமும் செலுத்த முடிவதில்லை. அதில்தான் நிறையப் பேர் பள்ளிக்கு வருவதைப் பாதியில் நிறுத்தி விடுகிறார்கள்.

உதாரணமாக, ஆசனூர் பள்ளியில் 3 வருடங்களாகத் தலைமை ஆசிரியர் இல்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளஸ் 2 வகுப்பில் 54 பேர் படித்தார்கள். தேர்வு எழுதியதோ 17 பேர்தான். மற்றவர்கள் 6 மாதமாகவே பள்ளிக்கு வரவில்லை; தேர்வும் எழுதவில்லை. இதையெல்லாம் மீறித்தான் இந்தப் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 82 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். பர்கூர் பள்ளியில் தேர்வு எழுதிய அத்தனை பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பழங்குடியினர் குழந்தைகள் அடர்ந்த வனப் பிரதேசத்தில் வசிக்கிறார்கள். பல மைல் தூரம் வனம், வன விலங்குகளைக் கடந்துவந்து, தங்கிப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளிகளைப் பழங்குடியினர் துறையில் இணைத்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அதுவே இவ்விஷயத்தில் தனிக் கவனம் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. அதை மாற்றி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இந்தப் பள்ளிகளைக் கொண்டுவர வேண்டும்''.

இவ்வாறு ‘சுடர்’ நடராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x