Published : 23 Jun 2020 01:36 PM
Last Updated : 23 Jun 2020 01:36 PM
கரோனா காலத்தில் பெற்றோருக்கு ஏற்படும் அலைச்சலை தவிர்க்க ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான பதிவை கோவையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று தொடங்கியுள்ளது.
கோவை அருகே உள்ளது ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளி வளாகத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா, அனைத்து வகுப்புகளிலும் ஒலிப்பெருக்கி, 100 பேர் அமரக்கூடிய வகையில் வீடியோ கான்ஃபரன்சிங் வசதி கொண்ட ஸ்மார்ட் கிளாஸ், விற்பனையாளர் யாரும் இன்றி, தங்களுக்குத் தேவையான பொருட்களை மாணவர்களே நேரடியாகப் பணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் வகையில் 'நேர்மை அங்காடி', ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளிக்கெனத் தனி இணையதளம், முகநூல் பக்கம் (https://www.facebook.com/ghssokm/) எனப் பல்வேறு சிறப்பம்சங்களோடு இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் மேம்பாட்டுக்காக முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் உதவி வருகின்றனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு முறையும் இப்பள்ளியின் சிறப்பம்சங்களில் ஒன்று. இந்நிலையில், கரோனா காலத்தில், 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்காக பெற்றோர்கள் பள்ளிக்கு நேரடியாக வருவதைத் தவிர்க்கும் நோக்கில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அப்பள்ளியின் இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முயற்சி குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் கோ.ரமேஷ் கூறும்போது, "மாணவர் சேர்க்கை குறித்து பல பெற்றோர்கள் விசாரித்து வந்தனர். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஏற்படும் அலைச்சலை தவிர்க்க ஆன்லைனில் பதிவு முயற்சியை நடைமுறைப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு (தமிழ், ஆங்கில வழி வகுப்புகள்) பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
தற்போது பதிவு மட்டுமே நடைபெறுகிறது. அரசு அறிவித்த பிறகு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://ghssokm.in/application-form/ என்ற இணையத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT