Published : 20 Apr 2020 08:37 PM
Last Updated : 20 Apr 2020 08:37 PM
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தமிழக கல்வித் துறையின் மாநிலப் பாடத்திடத்துக்கு உட்பட்ட பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் அரசு நிறுவனங்கள் உட்பட சில பிரிவுகளுக்கு ஊடரங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால் பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியானது இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.
1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை அச்சடிக்கத் தமிழக பாடப் புத்தகக் கவுன்சிலின் அச்சுப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். தனிமனித விலகல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டவாறு அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
வரலாறு காணாத அளவுக்கு கரோனா வைரஸ் தொற்றானது உலகத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. இன்னும் அதன் பிடியில் இருந்து நாம் விடுபடவில்லை. இந்நிலையில் அச்சில் ஏறவிருக்கும் பாடப் புத்தகங்களில் இதுகுறித்த பாடப் பகுதிகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதா, குறிப்பாக உயிரியல் பாடத்தில் இது குறித்த தகவல்கள் சேர்க்கப்படுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஏதும் நடைபெற்றதா என்பது குறித்து தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்ட நிர்ணயக் குழு ஆலோசகரிடம் பேசினேன்.
அவர் கூறியதாவது:
"தமிழக பாடப் புத்தகக் கவுன்சிலால் ஆண்டுதோறும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் புத்தகங்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான புத்தகம், தமிழ் வழி பாடத்திட்டப் புத்தகம், ஆங்கில வழி பாடத்திட்டப் புத்தகம் என மொத்தம் 10 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் புதிய பாடத்திட்ட மாற்றங்கள் தவிர ஆண்டுதோறும் பிழைத் திருத்தங்கள் புத்தகங்களில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
ஆனால், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது ஜனவரி மாதத்திலேயே முடிவடைந்து விட்டது. இதனால் நடப்பாண்டில் கரோனா குறித்த பாடப் பகுதி எந்தப் பாடப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை. அதிலும் இந்த நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி, மருந்து போன்றவை இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் கடைசி நேர மாற்றங்கள் செய்யவும் அவசியம் ஏற்படவில்லை. ஆனால், இத்தகைய விஷயங்கள் கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு 2004-ம் ஆண்டு முன்புவரை இந்தியா அறிந்திடாத ஆழிப்பேரலை குறித்த தகவல்கள் புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டபோது சேர்க்கப்பட்டது.
அதேபோன்று 2015-ம் ஆண்டில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைக் கடுமையாகப் பாதித்த பெருவெள்ளம் குறித்த கவிதை பாடப் புத்தகத்தில் இடம்பெற்றது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் திருக்குறளின் 105 அதிகாரங்களும் பாடப்புத்தகங்களில் இடம்பெறச்செய்ய வேண்டும் என்ற தீர்ப்பு 2017-ம் ஆண்டில் வழங்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது மட்டுமல்லாமல் இந்தச் செய்தியையே குடிமையியல் பாடத்தில் கொண்டு வந்தார் அன்றைய பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராகப் பணியாற்றிய உதயசந்திரன்.
எல்லாவற்றையும்விட இந்திய வரலாற்றில் தமிழகத்தைத் தடம் பதிக்கச் செய்திருக்கும் கீழடி ஆராய்ச்சி குறித்த செய்திகள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோல கரோனா குறித்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் அடிப்படையிலான பாடப் பகுதிகளும் வருங்காலங்களில் இணைக்கப்படும்".
இவ்வாறு பாடத்திட்ட நிர்ணயக் குழு ஆலோசகர் கூறினார்.
இது ஒரு புறம் இருக்க, மறு புறம் புதிய கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்ற குழப்பமும் தற்சமயம் என்ன செய்வது என்ற யோசனையும் பெற்றோரையும் மாணவர்களையும் வாட்டி எடுக்கிறது. இக்காலகட்டத்தில் https://www.tntextbooks.in/ இணையதளத்தின் மூலம் அனைத்து வகுப்புகளுக்கான தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் பாடப்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படிக்கத் தொடங்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT