Published : 03 Apr 2020 08:03 AM
Last Updated : 03 Apr 2020 08:03 AM
விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நடப்பாண்டு 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்தமார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு மார்ச் 16-ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுதவிர 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முழுமையாகவும், பிளஸ் 1 வகுப்புக்கு 3 பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு இறுதிநாளில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி,அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகளுக்கும் அனுப் பிய சுற்றறிக்கை:
கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கதிட்டமிட்டிருந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு ஏப். 7-ல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஊரடங்கு அமலில் உள்ளதால் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. மாற்று தேதிகள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT