Published : 18 Mar 2020 05:05 PM
Last Updated : 18 Mar 2020 05:05 PM
வேலைவாய்ப்புக்காக புதுச்சேரி, காரைக்காலில் 4,060 கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக மத்திய அரசு ரூ.29.28 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா என்ற திட்டத்தை மத்திய மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி அறிமுகம் செய்தது. கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதுடன் வேலைவாய்ப்பையும் பெற்றுத் தருவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இறங்கியது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 4,060 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டத்திற்காக மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு ரூ.29.28 கோடி ஒதுக்கியுள்ளது.
முதற்கட்டமாக 3,185 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்காக தேசிய அளவில் டெண்டர் கோரப்பட்டன. இதில் 29 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்தன. இந்நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நபார்டு கன்சல்டன்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 9 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தலைவரும், மாநிலத் திட்ட இயக்குனருமான ரவிபிரகாஷ் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நேர்காணல் நடத்தினர். இதில் 7 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் கிராமங்களில் இளைஞர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் நடந்தது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் தலைவர் ரவிபிரகாஷ் மற்றும் 7 நிறுவனங்களின் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT