Published : 12 Mar 2020 10:54 AM
Last Updated : 12 Mar 2020 10:54 AM
உள்கட்டமைப்பில் முன்னேற்றம் இல்லாவிட்டால் புதுச்சேரி சட்டக் கல்லூரியில் சேர்க்கை நிறுத்தப்படும் என்று பார் கவுன்சில் எச்சரித்துள்ளது. இதன் மூலம் வரும் கல்வியாண்டுக்கு சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற அச்சம் மாணவர்களிடம் எழுந்துள்ளது.
புதுச்சேரி அரசின் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளும், பட்டயப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆனால் கல்லூரி உள் கட்டமைப்பு தொடங்கி வகுப்பறை சூழல், கல்லூரி வேலை நாட்கள், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம், கற்பித்தல் நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. சட்டக்கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் இல்லாதது, நூலகப் பிரச்சினை தொடங்கி பல குறைபாடுகள் வெளிப்படையாக சர்ச்சையாகி வந்தது.
இச்சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் பார் கவுன்சில் ஒரு சுற்றறிக்கையை சட்டக்கல்லூரிக்கு அனுப்பியது. அதில் முழு நேரக் கல்லூரி முதல்வர் இல்லாதது, சட்டப் பாடங்களில் ஆசிரியர் இல்லாதது- அப்பதவியில் உள்ள குறைபாடுகள், பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் கிடைக்காதது, செமஸ்டர் தேர்வில் விதிகளைப் பின்பற்றாதது ஆகியவற்றைச் சுட்டிக் காட்டியிருந்தது. இதன் அமலாக்கத்தை பொறுத்தே வரும் 2020-21 கல்வியாண்டுக்கு சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.
இதுதொடர்பாக கல்லூரி வட்டாரங்களில் விசாரித்தபோது, "பார் கவுன்சில் சுற்றறிக்கை அமலாக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு மற்றும் கற்பித்தல் நேரம் தொடர்பான பிரச்சினைகள் கல்லூரி மட்டத்தில்தான் தீர்க்கப்பட முடியும். பாடங்கள் விவகாரம், காலியிடங்களை நிரப்புதல், முதல்வரை நியமித்தல், நூலகத்துக்கு புத்தகம் வாங்குதல் ஆகியவை அரசின் வசமே உள்ளது. வரும் கல்வியாண்டில் சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்புகளில் சேர்க்கை நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை" என்கின்றனர்.
மாணவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "பல ஆண்டுகளாக இப்பிரச்சினைகள் இருக்கிறது. நிரந்தர முதல்வர், போதிய ஊழியர்கள் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக ஆசிரியர்கள் போதிய பாடங்களுக்கு இல்லை. செமஸ்டர் தேர்வின்போது கேள்வித் தாளேயே மாற்றி தரும் சம்பவங்களும் இங்கு நடந்தது. நூலகங்களில் புத்தகங்களே இல்லை. அரசோ எதையும் கண்டுகொள்வதில்லை. ஆங்கிலம், சமூகவியல் உட்பட சட்டம் சாரா பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இல்லாத போது சட்டமல்லாத பாடங்களின் தேர்வுகளை மட்டும் நடத்துவது ஏன்?" என கேள்வி எழுப்பினர்.
சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் தரப்பில் கேட்டதற்கு, " 28 ஏக்கர் பரப்பிலுள்ள சட்டக்கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஊழியர்கள் இல்லாதது முக்கிய பிரச்சினை. சமூக விரோதிகள் இரவில் நடமாடுவது பலருக்கும் தெரியும். பாதுகாப்பு இல்லாததால் புதிதாக கட்டப்பட்ட பெண்கள் விடுதி 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டத்திலிருந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது. இப்போது இவ்விடுதியைச் சுற்றி காடு போல் தாவரங்கள் வளர்ந்துள்ளன. சமூக விரோதிகளும் இக்கட்டடித்தை சேதப்படுத்தியுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.
இதுதொடர்பாக சட்டக்கல்லூரி உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "பத்தாண்டுகளுக்கு மேலாக பல பிரச்சினைகள் நிலவுகிறது. சமூக விரோதிகளால் சட்டக் கல்லூரியில் இருந்து பல பொருட்களை இழந்துள்ளோம். ஏராளமான டேபிள்கள், இருக்கைகள், மின்சாதனங்கள் மற்றும் பைப்புகள் ஆகியவை திருடு போனதாக காவல்துறையிலும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார் கவுன்சில் சுற்றறிக்கையைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டில் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது கடினமான நிலைக்கு மாறியுள்ளது.
போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கான சட்டக் கல்வி 2008 விதிகளை பின்பற்றத் தவறினால், சேர்க்கையை நிறுத்தவும் இந்திய பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT