Published : 18 Feb 2020 01:10 PM
Last Updated : 18 Feb 2020 01:10 PM
ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான காலி இடங்கள் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் நுழைவுத் தேர்வு தற்காலிக அட்டவணையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலுள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி உள்பட பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம். இதற்கிடையே ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 2020-21 ஆம் கல்வியாண்டுப் படிப்புகளுக்கானத் தற்காலிக நுழைவுத் தேர்வு அட்டவணைப் பட்டியல் அதன் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதன்படி வரும் ஜூலை மாதம் எம்டி, எம்எஸ், பிடிஎப், எம்டிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடைகிறது. ஆன்லைன் நுழைவுத் தேர்வு மே 17-ம் தேதியும், அதைத் தொடர்ந்து கலந்தாய்வும் நடக்கிறது. ஜூலை 31-ல் மாணவர் சேர்க்கை நிறைவடைகிறது.
வரும் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது நீட் கலந்தாய்வு முறையில் நடத்தப்படும் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது. இதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும். தற்போது ஜிப்மரில் புதுச்சேரிக்கு 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதம் தரப்படுவதால் இடங்கள் உயர்த்தப்படுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்தது.
அதேபோல் 10% இட ஒதுக்கீட்டு அமலால், மத்திய அரசு கூடுதல் இடங்கள் பெற்றுக் கலந்தாய்வு நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி 49 இடங்கள் உயர்த்தப்பட உள்ளன. தற்காலிகத் தேர்வு அட்டவணையில் எம்பிபிஎஸ் இடங்கள் 249 என ஜிப்மர் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT